
அட்லாண்டிக்
கடலில் உருவான இர்மா புயல், உலகிலேயே 2-ஆவது அதி பயங்கர புயலாகும். கடந்த 2
நாட்களாக கரீபியன் தீவுகள், கியூபாவை சூறையாடிய இர்மா, வேகமாக நகர்ந்து
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் நெருங்கியது.
இர்மா புயலையொட்டி, கடந்த ஒரு வாரமாக புளோரிடா மாநிலம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலம்
முழுவதற்கும் புயல் அபாயம் இருப்பதால், ஒட்டு மொத்த மக்களும்
குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல
அறிவுறுத்தப்பட்டனர்.

பள்ளி,
தேவாலயம், விளையாட்டு உள் அரங்கங்கள் என 400க்கும் மேற்பட்ட தற்காலிக
முகாம்கள் அமைக்கப்பட்டன. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை
தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் முகாம்களில் பெரும்பாலான மக்கள்
தஞ்சமடையத் தொடங்கினர்.
புளோரிடாவின்
தாழ்வான பகுதியான கீஸ் தீவை நேற்று காலை 7 மணிக்கு புயல் தாக்கத்
தொடங்கியது. புயல் நகர நகர மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்
காற்றுடன் கனமழை கொட்டியது. 15 முதல் 20 அடி உயரத்திற்கு கடல் அலைகள்
ஆர்ப்பரித்தன.

கனமழை
காரணமாக, கீஸ் தீவுக் கூட்டத்தின் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம்
சூழ்ந்தது. காலை 9 மணிக்கு கீஸ் தீவை புயல் முழுமையாக மையம் கொண்டது. புயல்
வலுவடைந்ததைத் தொடர்ந்து மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளது.
மியாமியில்
அதிகபட்சமான பகுதிகளில் மக்கள் இருளில் தவிக்கின்றனர். மியாமி நகரின்
பெரும்பாலான சாலைகளில் மரங்கள் சரிந்து காடு போல் காட்சி அளிக்கிறது.
புயலையொட்டி
மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் திங்கட்கிழமை வரை அரசு அலுவலங்கள்,
பள்ளிகள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.