தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை தெரிவித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதில் புதிய அரசமைப்புக்கு மஹிந்த ஆதரவளிக்க வேண்டும் என்று சம்பந்தன் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பில் மஹிந்தவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசமைப்பு குறித்தும், அதற்கு எனது ஆதரவின் அவசியம் குறித்தும் சம்பந்தன் என்னிடம் விளக்கினார். நானும் அதிலுள்ள சில விடயங்கள் குறித்து பிரஸ்தாபித்தேன்.
புதிய அரசமைப்பு ஒன்றுக்கான அவசியமொன்று இப்போது இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனது ஆதரவாளர்களையும் கட்சி முக்கியஸ்தர்களையும் கைது செய்து
எனக்கெதிராக கெடுபிடிகளை விதிக்கும் இந்த அரசு என்னிடம் ஆதரவை எப்படி எதிர்பார்க்கின்றது என்பது தெரியவில்லை.
எப்படியாயினும், இந்த விடயத்தில் என்னால் தனித்துத் தீர்மானங்களை எடுக்க முடியாது என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தினேன்.
பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் நிலைப்பாட்டை முதலில் நான் அறியவேண்டும். பின்னரே சம்பந்தனின் கோரிக்கை குறித்து பதிலொன்றை வழங்கமுடியும்.
எப்படியோ சம்பந்தன் எனது ஆட்சிக்காலத்தில் இப்படி வந்து பேச்சுகளை மனம்விட்டு நடத்தியிருக்கலாம். அப்போது பல பிரச்சினைகளைப் பேசித் தீர்த்திருக்கலாம். இதை நான் அவரிடம் நேரடியாகவே தெரிவித்தேன் என்று மஹிந்த கூறியுள்ளார்.