எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதிநீக்கம்; சபாநாயகர் அதிரடி
சென்னை : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியா அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் அடுத்தது என்ன நடக்கும் என அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் கடந்த மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 18 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் அளித்திருந்த கெடு கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் விளக்கம் அளிக்காத 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குடகு சொகுசு ரிசார்ட்டில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கோர்ட்டை நாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.