அடுத்த வெசாக் தினத்திற்குள் அரசாங்கத்தை வீழ்த்தினால் மொட்டை அடித்துக்கொள்வேன். மஹிந்த ராஜபக்ஷ முடியுமானால் இந்த சவாலை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அரசாங்கத்தை சட்டப்படியோ சட்டவிரோதமாகவோ வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்து வருகின்றார். அதேபோன்று அடுத்த வெசாக் போயா தினத்துக்கு முன்னர் அரசாங்கத்தை வீழ்த்துவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒருபோதும் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. அதற்கு நாங்கள் இடமளிக்கவும் மாட்டோம்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதுபோல் அடுத்த வெசாக் தினத்துக்கு முன்னர் அரசாங்கத்தை வீழ்த்தினால் நான் மொட்டை அடித்துக்கொள்வேன். மஹிந்த ராஜபக்ஷ முடியுமானால் இந்த சவாலை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளட்டும். அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடன் இருப்பவர்கள் தங்களின் ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்ளவே இவ்வாறான பொய் பிரசாரங்களை தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் அரச மருத்துவர் சங்கத்தினரும் மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்பந்தத்தையே மேற்கொண்டுவருகின்றனர். சைட்டத்தை காரணம் காட்டி அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்திலே செயற்படுகின்றனர்.
சைட்டம் மருத்துவ நிறுவனத்துக்கு எதிராக கொழும்பில் பல போராட்டங்களை நடத்திய இவர்கள் நேற்று முன்தினம் ஊவா மாகாணத்தில் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பொது மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்ற இவர்கள் சாதாரண மக்களின் உயிரைக்கூட மதிக்காமல் செயற்படுகின்றனர்.
அத்துடன் சைட்டம் தொடர்பான தெளிவான தீர்மானம் ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனையும் மீறி இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதென்றால் சைட்டம் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற தேவையும் இவர்களுக்கு இல்லை. மாறாக மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்பந்தத்தையே மேற்கொண்டவருகின்றனர்.
அதனால் ஜனாதிபதி இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.