அன்னம் சின்னத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கே பொது வேட்பாளர் கலாச்சாரம் பொருந்துவதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்ட ரீதியிலான பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை எமது கட்சியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். எனினும் அரசியலில் அதுவெல்லாம் சகஜமான விடயமாகும். ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்ஷவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்களில் பலர் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அவருக்கு எதிரான பல்வேறு நெருக்கடிகளை முன்னெடுக்கின்றனர்.
எவர் நீதியமைச்சராகப் பதவிக்கு வந்தாலும் பரவாயில்லை. சகல நடவடிக்கைகளையும் சட்டப்படியே முன்னெடுக்க வேண்டும். அத்துடன் நாட்டில் அதிகளவான வழக்குகள் எனக்கு எதிராகவே உள்ளன.
அரசாங்கம் தற்போது நீதித்துறை மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு முற்படுகிறது. “சட்டமா அதிபர் திணைக்களத்தில் தவறுகள் ஏதும் இடம்பெறவில்லை. எனவே அத்திணைக்களம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றார்.