முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் விதித்த முக்கிய
நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு வெற்றிகரமாக அமைந்தது. மேலும் ,ஆளுனர்
மாளிகையில் இன்று மாலையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வராக பதவியேற்றார்.
முக்கிய நிபந்தனையான சசிகலாவை விலக்கி
வைத்து விட்டு ஆட்சி மற்றும் கட்சியை வழி நடத்துவதில் அதிகாரப் பகிர்வு
செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே சற்று இழுபறி ஏற்பட்டது.இன்று
பிற்பகலில் நிபந்தனைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன.
எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக
தொடர்வது என்று இரு தரப்பினரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். துணை முதல்வாராக
ஓ.பன்னீர் செல்வமும் அவருடைய தரப்பிலிருந்து சிலர் அமைச்சர்களாகவும்
நியமிக்கப்படவுள்ளனர். இன்று பிற்பகலில் பதவியேற்புச் சடங்கு நடைபெறும்.
அதுபோல சசிகலாவை நீக்கிய பிறகு கட்சியை
வழிநடத்த 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு உருவாக்கவும், அந்த குழுவுக்கு
ஓ.பன்னீர் செல்வத்தைத் தலைவராக தேர்வு செய்ய இரு தரப்பினரும் சம்மதித்தனர்.
இவை தவிர மந்திரி சபையை மாற்றம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை இரு அணி தலைவர்களும்
தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள். அதன் பின்னர் பிற்பகல் 2 மணியளவில்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ராயப்பேட்டையில் உள்ள
கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
இதேபோல் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சிறிது
நேரத்தில் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் 2.40 மணியளவில்
தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் அணிகள் இணைந்ததை முறைப்படி
அறிவித்தனர்.
ஒரே மேடையில் ஓ.பன்னீர் செல்வம்,
முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்து மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார். அதேசமயம் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன்
தனியாக ஆலோசனை நடத்தினார். அவரது நிலைப்பாடு குறித்து பின்னர்
அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.