உள்ளுராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதியோ அல்லது அதற்கு முந்தைய தினத்திலோ நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “புதிய உள்ளுராட்சிமன்ற தேர்தல் சட்டமூலத்திற்கு அமைய, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து குறைந்தபட்சம் 60 தினங்களில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு காண்ப்படுகின்றது. இதனை என்பது நாட்களாக நீடித்துக்கொள்ள முடியும்.
இதற்கமைய டிசம்பர் மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் தேர்தலை நடத்த முடியும். இந்த தேர்தல் நடத்தப்படுகின்றபோது, சாதாரண தர பரீட்சையை கருத்திற்கொள்ளுதல் வேண்டும். குறித்த காலத்தில் தேர்தல் நடத்த முடியாமல் போகும்பட்சத்தில், அடுத்த வருடமே தேர்தலை நடத்த முடியும்.
தேர்தலில் கள உத்தியோகத்தர்கள் மட்டுமல்லாது, முழு அரச பணியாளர்களும் போட்டியிட முடியாது என்ற யோசனையை தேர்தல் ஆணைக்குழு முன்வைத்திருந்தபோதும், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைய, கள உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது’ என கூறினார்.