News Update :

Monday, July 3, 2017

TamilLetter

ஷாகிர் நாயக்கின் மலேசியச் சொத்துகள்: கைப்பற்ற இந்தியா சட்ட நடவடிக்கை!


மும்பை, ஜூலை.4- இந்தியாவினால் தேடப்படும் சர்ச்சைக்குரிய மத போதகர் ஷாகிர் நாயக், மலேசியாவில் வைத்திருக்கும் சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கு மலேசிய நீதிமன்றங்களின் ஒத்துழைப்பை நாடும் நோக்கில் மும்பை நீதிமன்றத்தில் இந்திய குற்றப் புலனாய்வு துறை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
மலேசியாவில் ஷாகிர் நாயக்கிற்கு சொந்தமாக உள்ள சில சொத்துக்களைச் சட்டப்பூர்வமாகக் கைப்பற்ற, மும்பை சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறவே இந்தியாவின் அமலாக்க செயலகம் இந்த விண்ணத்தைத் தாக்கல் செய்துள்ளது.
மலேசியாவில், ஷாகிர் நாயக்கிற்கு சொந்தமானது என்று கருதப்படும் சில சொத்துக்களைத் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக அமலாக்க செயலகத்தின் சட்ட நிபுணர் ஹித்தன் வெனே கயன்கார் கூறினார்.
நீதிமன்ற வரம்புக்கு உட்பட்ட வகையில், ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து தகவல்களையோ, ஆதாரங்களையோ மீட்க அன்னிய நாட்டு நீதிமன்றம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுப்பதற்குத் தேவையான அனுமதிக் கடிதத்தை பெறுவதற்காக தாங்கள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக அவர் சொன்னார்.
நிதி மோசடிகளுக்கான சிறப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கச் செயலகம் இந்தக் கடிதத்திற்காக விண்ணப்பித்துள்ளது.
கடந்த காலங்களில் கோடிக்கணக்கான இந்திய ரூபாய் நிதி மோசடிகளிலும், பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதிலும், சமய வெறுப்புணர்வைத் தூண்டும் பிரசாரங்களிலும் ஷாகிர் நாயக் ஈடுபட்டு வந்ததாக இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காள தேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஷாகிர் நாயக்கை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவர் இந்தியாவை விட்டு ஓடி தலைமறைவாகி விட்டார். இந்தத் தாக்குதலில் அவரை சம்பந்தப்படுத்தும் வகையில் பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்கு மூலம் அளித்திருப்பதாக கூறப்பட்டது.
பயங்கரவாதிகளுடன் தமக்கு தொடர்போ அல்லது பயங்கரவாதத்தை வளர்க்கவோ தாம் முயன்றதில்லை என்று ஷாகிர் நாயக் மறுத்திருக்கிறார்.
இவருக்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிட உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. மலேசியக் குடியுரிமையைப் பெறும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இவரைக் கைது செய்தவதற்கு 'இண்டர்போல்' எனப்படும் அனைத்துலகப் போலீசின் உதவியை இந்தியா நாடியுள்ளது. 
இதனிடையே, மலேசியாவிலுள்ள ஷாகிர் நாயக்கின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கான அனுமதி ஆவணம் மும்பை நீதிமன்றத்திட மிருந்து கிடைத்தவுடன், அதே ஆவணத்தின் அடிப்படையில் ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள அவரது சில சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கச் செயலகம் தெரிவித்தது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-