News Update :

Saturday, July 15, 2017

TamilLetter

படையினர் கைது செய்யப்படுவதை தடுக்க ஆட்சியை மாற்ற வேண்டும் ; மகிந்த






படையினர் கைது செய்யப்படுவது மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறையை நிறுத்த ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் நலன் விசாரிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று வந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இதனிடையே விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தசநாயக்கவின் நலன் அறிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமை மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான விசேட பிரதிநிதியை மகிழ்விக்கும் நோக்கில் இவ்வாறான அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வீமல் வீரவங்ச கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் விசாரணைகளில் இராணுவப் புலனாய்வாளர்கள் உட்பட படையினர் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பான உண்மைகளை கூறிவிட்டால்,

ராஜபக்சவினர் உட்பட கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்க நேரிடும் என்பதாலேயே இந்த கைதுகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அவர்கள் உண்மைகளை வெளியிட்டு விடக் கூடாது என்பதற்காகவே கூட்டு எதிர்க்கட்சியினர் அவர்களை சிறையில் சென்று சந்தித்து வருவதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-