News Update :

Friday, July 7, 2017

TamilLetter

கோட்டாபய விரைவில் கைது? மகாநாயக்கர்களிடம் சரணடைந்த ராஜபக்ச


ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே இன்று தெரிவித்திருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க யுத்தத்தை வழிநடத்திய ஒரே காரணத்திற்காக தன்னை கைது செய்ய தற்போதைய அரசாங்கம் சர்வதேசம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் காலை அவசரமாக சிங்கள பௌத்த மக்களின் தலைமைப் பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்துப் பீட மகாநாயக்கர்களை சந்தித்தார்.
தன்னை கைது செய்வதற்கு அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வருவதாக தனக்கு கிடைத்த தகவலை அடுத்தே இதுகுறித்து மகாநாயக்க தேரர்களிடம் அறிவிக்கவும், கவலை தெரிவிக்கவும் இன்று அவர் கண்டிக்கு விரைந்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ச “எனக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து மகாநாயக்கர்களுக்கு தெரிவிக்க வேண்டும்தானே. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, என்னை இன்னும் ஒருமாதத்தில் கைது செய்வதாக கூறியுள்ளார்.
இதுவா நீதி? மஹிந்த அமரவீர வழக்கு விசாரணை செய்பவரா? தீர்ப்பு வழங்குபவரா? அப்படியானால் அதில் என்ன நீதி இருக்கிறது? ராஜபக்சக்கள் என்பது இந்த நாட்டின் திருடர்கள் அல்லை.
உயிரைப் பணயம் வைத்து இந்த நாட்டை காப்பாற்றியவர்கள். மஹிந்த அமரவீர இதை செய்தவரா? 80 வருடங்களாக இந்த நாட்டில் அரசியல் செய்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். அரசியலில் சம்பாதித்தவர்கள் நாங்கள் அல்லர். மோசடியாளர்கள் என்ற முத்திரையைக் குத்தி எம்மை பழிவாங்குகிறார்கள். கோட்டாபயவை வரமுடியாமல் சிறைபிடிப்பதாக மஹிந்த அமரவீர கூறியுள்ளார். மிகவும் கவலையடைகிறேன். இந்த அறிவிப்பு குறித்து மகாநாயக்கரை சந்தித்து எனது கவலையை வெளியிட்டேன்” என்றார்.
இதேவேளை ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாத்திரம் யுத்தத்தை முன்னெடுக்கவில்லை என தெரிவித்திருக்கும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாய ராஜபக்ச, யுத்தத்தை முன்னெடுக்க அனைத்து ஜனாதிபதிகளும் போரின்போது இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமென தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஒரே காரணத்திற்காகவே இராணுவத்தின் மீதும் கடந்த ஆட்சியாளர்கள் மீதும் போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கும் கோட்டபய, இதற்குப் பின்னால் பாரிய அரசியல் சதித் திட்டங்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
“யுத்தம் இடம்பெற்றபோது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர், இராணுவத் தளபதிகள் இருவர், கடறபடை அதிகாரிகள் 7 பேர், விமானப் படை அதிகாரிகள் இருவர், புலனாய்வுப் பிரிவு பிரதானி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும், யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்தவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக சி.ஐ.டி, எவ்.சி.ஐ.டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நாங்களா இந்த நாட்டின் திருடர்கள்? இராணுவமோ கடற்படையோ படையில் சிறந்தவர்களே தளபதிகளாக நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து ஜனாதிபதி அறிவாரா என்று தெரியாது. சிலரது தேவைகளுக்காக இந்த நடவடிக்கை என்னெடுக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்தவர்களின் தேவைக்காக இடம்பெறுகிறது. சட்டமூலமொன்றை கொண்டுவர முயன்ற போதிலும், மகாநாயக்க தேரர்களின் தலையீட்டின் பின்னர் பிற்போடப்பட்டது.
மீண்டும் அதனை கொண்டுவருவார்களா என சிந்திக்கின்றோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நபர்களுக்கு எதிராகவே இதனை செய்கின்றனர். எனவே விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்தமையே நான் செய்த ஒரேயொரு ஊழலாகும். அதற்காக சிறையில் என்னை தள்ள வேண்டுமென்றால் தள்ளட்டும். அப்பாவி மக்களைக் கொல்வதற்காக யாரும் 30 வருடகால யுத்தத்தை நடத்தவில்லை.
கடந்த 5 வருடங்களாக மட்டும் யுத்தம் மேற்கொள்ளப்படவில்லை. ஆட்சிக்குவந்த அனைத்து ஜனாதிபதிகளுமே யுத்தத்தை நடத்தியிருந்தனர். அப்படியென்றால் இறுதி யுத்தத்தை முன்னெடுத்த இராணுவம் மட்டுமா குற்றத்தை இழைத்துள்ளது? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். இறுதி யுத்தத்தை நடத்திய இராணுவம் மட்டுமே குற்றம் இழைத்துள்ளது. யாருடைய தேவைக்காக இது சொல்லப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-