கனடாவுக்கு சவுதி எச்சரிக்கை
தெய்வநிந்தனை குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் வலைப்பதிவாளர் றெய்ஃப் படாவி விடயத்தில் கனடா தலையிடாது என்று கனடாவுக்கான சவுதி அரேபிய தூதுவர் பின் பான்டிர் தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் கடந்த புதன்கிழமை இந்த கருத்தினை வெளியிட்ட அவர் சவுதி அரேபிய நீதித்துறை வழங்கும் தீர்ப்புக்களுக்கு கனேடிய அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட றெய்ஃப் படாவிக்கு ஆயிரம் கசை அடியும் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான 50 கசையடிகள் எற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில் மோசமான உடல்நிலை காரணமாக மீதமுள்ள கசையடி தண்டனை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அனைத்துலக கண்டனத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விடயம் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, போதியளவிலான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என அனைத்துலக மன்னிப்பு சபை குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன் றெய்ஃப் படாவி கனேடியர் இல்லை என்ற போதிலும் அவரது மனைவியும் மூன்று பிள்ளைகளும் கியூபெக்கில் வசிக்கின்றனர் என்ற அடிப்படையில் இந்த விடயத்தில் கனடா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி றெய்ஃப் படாவியின் விடுதலையை வலியுறுத்தி கியூபெக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கனேடிய நீதிமன்ற தீர்ப்புக்களை தாம் மதிப்பது போன்று சவுதி அரேபிய நீதிமன்ற தீர்ப்புக்களை கனடா மதிக்க வேண்டும் என்று கனடாவுக்கான சவுதி அரேபிய தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.