News Update :

Thursday, July 13, 2017

TamilLetter

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம்



அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பிராட்லி ஷெர்மன் அந்தத் தீர்மானத்தை புதன்கிழமை தாக்கல் செய்தார். "கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டது என்று கூறப்படுவது தொடர்பான விசாரணையை டிரம்ப் முடக்கப் பார்க்கிறார்; இது சட்டம், நீதியை முடக்கும் செயல். இந்தக் குற்றத்துக்காக அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று கோரும் பதவி நீக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 45-ஆவது அதிபரான டிரம்ப்புக்கு எதிராகக் கொண்டு வரப்படும் முதல் பதவி நீக்கத் தீர்மானம் இதுவாகும். முதல் கட்டமாக பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் ஒப்புதல் பெற்றால்தான் அதன் மீதான விவாதம் நடைபெற முடியும். ஆனால் பதவி நீக்கத் தீர்மானம் முதல் கட்டத்தை தாண்டுவது சந்தேகம். அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தோற்கடிக்கப்படுவது உறுதி. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சியினருக்குப் பெரும்பான்மை உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ரஷியா மறைமுகமாகத் தலையிட்டது என்ற குற்றச்சாட்டு பல நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது. டிரம்ப் அது குறித்து அறிந்திருந்தார் என்பது ஜனநாயகக் கட்சியினரின் வாதம். ரஷிய தரப்பினரோடு டிரம்ப்பின் மூத்த மகன் தொடர்பு கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தலையீடு குற்றச்சாட்டை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல் சேமிப்பகத்தை ஊடுருவியது போன்ற சதிச் செயல்கள் தனி நபர்களின் வேலையாக இருக்கக் கூடும்; ரஷிய அரசுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புதின் கூறி வருகிறார்.

பதவி நீக்கத் தீர்மானம் குறித்து குடியரசுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் கூறுகையில், அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம் கேலிக்குரிய செயலாகும்.

ஜனநாயகக் கட்சியினரின் செயல் வேடிக்கையானது என்று கூறும் அதே வேளையில், இது போன்ற அரசியல் நாடகத்தை அவர்கள் நடத்த வேண்டிய தாழ்ந்த நிலை எழுந்துவிட்டதே என்கிற வேதனையும் ஏற்படுகிறது என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-