News Update :

Sunday, July 2, 2017

TamilLetter

கிழக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

கிழக்கு  முதலமைச்சர்  எச்சரிக்கை விடுத்தார்.

சிறுபான்மைகள் இணைந்து குரல் கொடுக்கத் தவறின் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் எச்சரிக்கை விடுத்தார்.

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வண்ணமே பிளவுபட்டு வாழ்ந்து வருகின்ற இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து ஓங்கிக் குரல் கொடுக்கத் தவறினால் உரிமைகளை இழந்து ஓரங்கட்டப்படும் நிலை உருவாகும்.
ஏறாவூர் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நாம் கிழக்கிலே ஒரு ஐக்கியப்பட்ட ஆட்சியை நிலைநாட்டியிருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சி தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றது.
அதேபோல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் மக்களின் நலன்களுக்காக உரிமைகளுக்காக அர்ப்பணித்துச் செயற்பட்டு வருகின்றது.
இவ்விரு கட்சிகளும் இணைந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக ஏகோபித்துக் குரல் கொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
இது காலவரையும் நாட்டில் நிலவிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எதிர்பார்க்கப்படுகின்ற வேளையிலே இந்த இரு சிறுபான்மை இனங்களின் இணைவு என்பது இன்றிமையாத ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
ஒட்டு மொத்த அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொள்ள வேண்டிய தற்போதைய தருணத்திலே மக்களும் தமது ஒற்றுiமையை வெளிக்காட்டி அதி கூடிய அதிகாரப் பகிர்வை பெறவேண்டும்.
இந்த சிறுபான்மைகளுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு விடக் கூடாது என்பதின் காரணமாக கடந்த காலத்திலே பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தமது பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு சிறுபான்மை அரசியல் தலைமைகளையும் அடிமட்ட மக்களையும் பல்வேறு வழிகளில் பிரித்து வைத்தார்கள்.
இதனை நாம் நின்று நிதானித்துப் பார்த்து பரஸ்பர வெறுப்பின்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்தத் தவறுகளை இனிமேலும் நாம் அனுமதிக்கக் கூடாது.
அதேவேளை நாட்டிலே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் மத்திய நல்லாட்சி அரசுக்கும் மிகப் பாரிய பொறுப்பு இருக்கிறது.
நாட்டிலே சமாதானம் வேண்டுமெனில் சிறுபான்மைச் சமூகங்களைச் சீண்டிப் பார்க்காது அவர்களின் அரசியல் உரிமைகளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
நாம் கிழக்கு மாகாண சபையைப் பொறுப்பெடுத்ததிலிருந்து இதுவரை தேசத்திற்கு முன்மாதிரியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுடன் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இணைந்து தேசிய இன ஐக்கியத்திற்கும் நல்லாட்சிக்கும் அர்த்தம் கற்பித்து ஆட்சி நடத்தி வருகின்றோம் என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-