News Update :

Saturday, July 22, 2017

TamilLetter

காவியுடை தரித்தவர்கள் எமக்கு நீதிபதியாக வருவார்கள்

காவியுடை தரித்தவர்கள் எமக்கு நீதிபதியாக வருவார்கள் 


ஐக்கிய தேசிய கட்சி இவ்வருட இறுதிக்குள் உள்ளுராட்சி சபைத் தேர்தலை தொகுதி வாரியாக எழுபது வீதமும், பிரதேச வாரியாக முப்பது வீதமாக நடாத்த வேண்டும் என அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ.. அமீர் அலி தெரிவித்துள்ளார்.
கிராமிய பொருளாதார அமைச்சின் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் ஏறாவூர் ஹிதாயத் நகர் பகுதியில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் என்றோ ஒருநாள் மாவட்டத்திற்குள் கம்பீரமாக நுழையும் பொழுது பிரச்சினைக்குரிய சமூகமாக மாறப்போவது தமிழ், முஸ்லிம் உறவுகளே.
வாழைச்சேனை, மீராவோடை பகுதியில் நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட காணி விடயத்தை பூதாகரமாக்கி மட்டக்களப்பு தேரரை அந்தப் பகுதிக்கு மக்கள் வரவழைத்து நீதி, நியாயம் கேட்கின்ற நடைமுறை வட கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று சொன்னால் இரண்டு சமூகத்திற்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும், நிம்மதியாக வாழ முடியாது என்பது என்னுடைய கருத்தாகும்.
பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் தான் தமிழ் சமூகம். அவர்கள் கற்றுக் கொண்ட பாடம், கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட நஷ்டங்கள், துன்பங்கள் என்ற விடயம் அந்த தரப்பினரால் இன்னுமொரு இனத்தவருக்கு ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.
வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழ்கின்ற சந்தர்ப்பம் இல்லை என்று சொன்னால் காவியுடை தரித்தவர்கள் எமக்கு நீதிபதியாக வருவார்கள் அவ்வாறு வரும் போது நாம் ஒன்றுபடுவதை அவர்களில் சிலர் விரும்பவும் மாட்டார்கள்.
ஒரு நிலவரம் வருகின்ற போது இதனை கொடுக்கக் கூடாது என்று சொன்னால் முஸ்லிம் தலைவர்களை அழைத்து தமிழ் மக்கள் இப்படி கேட்கின்றார்கள் நீங்கள் இதற்கு உடன்படுவீர்களா என்று அவர்கள் சொல்லாமலே சொல்லுவார்கள். இதற்கு முரண்படுங்கள் என்று.
தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தமிழ் முஸ்லிம் பகுதியில் இனவாதத்தை தூண்டுகின்ற எல்லா சக்திகளும் ஒரு காலத்தில் யோசிக்க தவறுமாக இருந்தால், இந்த சந்தர்ப்பம் நழுவப்படுமாக இருந்தால் யாருக்குமே இந்த நாட்டிலே ஒரு மாற்றத்தை பெற்றுக் கொள்ள முடியாது.
இரண்டு சிறுபான்மை சமூகம் பிரச்சினைப்பட்ட காலம் போதுமானது. எங்களை இன்னும் பிரித்து வைத்து தந்ரோபாய அரசியலுக்குள் எங்களை மீண்டும் தள்ளி எடுத்து ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை எங்களுடைய நிறங்களை மாற்றி மாற்றி சொல்லுகின்ற அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும்.
அரசியல் தலைமைகள் விரும்புமாக இருந்தால் வட புலத்தில் இருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் விடயத்தில் அவசரமாக சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்கள் இந்த வேலைத் திட்டத்தில் ஒரு முடிவை கொண்டுவருவதன் மூலம் சிறந்த முனைப்பை செய்ய முடியும் என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-