News Update :

Tuesday, July 18, 2017

TamilLetter

தமிழ் கூட்டமைப்போடு இணைவதா? பயந்த ஜனாதிபதி - விபரம் உள்ளே

தமிழ் கூட்டமைப்போடு இணைவதா? பயந்த ஜனாதிபதி - விபரம் உள்ளே

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டு எதிரணியில் அமர எவராவது விரும்பினால் அதற்கு எந்த தடையும் கிடையாது எனவும், எனினும் டிசம்பர் மாதம் வரை பொறுமைகாக்குமாறும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
18 பேர் கூட்டு எதிர்க்கட்சிக்கு செல்லவிருப்பதாக கூறப்பட்டாலும் யாரையும் வெளியேற்றப்போவது இல்லை எனவும் அவர் நேற்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுவழி இல்லாததாலேயே நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துகொண்டதாக தெரிவித்த அமைச்சர், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விருப்பம் கேட்கப்பட்டதாகவும் அரசாங்கத்தில் இணைந்திருக்காவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
டிசம்பரில் சுதந்திரக்க கட்சி அரசாங்கத்தைவிட்டு வெளியேறினால் 106 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பு திருத்தத்தில் முன்வைக்கும் கோரிக்கைகள் எவ்வாறானவை என்பது குறித்தும், புதிய அரசாங்கம் உருவாக்க கூட்டமைப்பு எவ்வாறான நிபந்தனைகளை முன்வைக்குமென்பதும் சுதந்திரக் கட்சிக்கு புரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கத்தை உருவாக்குவது என்பது நாட்டில் ஸ்தீரமற்ற நிலைமையை உருவாக்கும் எனவும், இது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவும் எனினும் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான முடிவை எடுப்பார் என கருதவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஒரு பகுதியினர் ஆளும் தரப்பிலும் வேறு சிலர் எதிரணியிலும் அமர்ந்ததாகவும், விருப்பமானவர்களுக்கு எதிரணில் அமர அனுமதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியல் யாப்பு திருத்தம் தேர்தல் மறுசீரமைப்பு ஆகிய பிரதான நோக்கங்களை நிறைவேற்றவே 2 வருடங்கள் நல்லாட்சி அரசில் இணைய தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
19ஆவது திருத்தத்திற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கிய போது 20ஆவது திருத்தத்தை கொண்டுவர உடன்பாடு காணப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் 20ஆவது திருத்தம் தாமதிக்கப்படாமல் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-