News Update :

Tuesday, July 25, 2017

TamilLetter

பெற்றோல் களஞ்சியசாலையை கைப்பற்றிய இலங்கை இராணுவம்

பெற்றோல் களஞ்சியசாலையை கைப்பற்றிய இலங்கை இராணுவம்



எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியசாலைகளை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இதனால் குறித்தப் பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை சீனாவுக்கு வழங்குதல், சீன துறைமுகத்தின் எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கு வழங்குதல் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நேற்று முன்தினம் முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இதனால் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதுடன், நேற்று மாலை எரிபொருள் நிலையங்களில் எரிபொருளும் முடிவடைந்துள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்துக்கும் பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்துக்கும் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலில் நியாயமான தீர்வு கிடைக்காமையினால், பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அறிவித்திருந்தது.
எனினும் அரசாங்கம், எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானியில் வெளியிட நேற்று (25) நள்ளிரவு அதிரடி நடவடிக்கையை எடுத்திருந்தது.
எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து பெற்றோலிய ஊழியர்களையும் உடனடியாக சேவைக்கு திரும்புமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது.
அவ்வாறு சேவைக்கு திரும்பாத ஊழியர்கள், சேவையிலிருந்து நீங்கியதாக கருதப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்து.
இதனைத் தொடர்ந்து கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய சாலைகளின் நுழைவாயிலை நேற்று இரவு திறப்பதற்கு பொலிஸார் முற்பட்ட சந்தர்ப்பத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.
எவ்வாறாயினும் இராணுவத்தினர் குறித்த நுழைவாயிலை இன்று காலை திறந்து அங்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை வெளியேற்றியுள்ளனர்.
மேலும் முப்படையினரின் ஒத்துழைப்புடன் இன்று காலை முதல பௌசர் மூலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொலனாவ, முத்துராஜவெல பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-