மாகாண கல்வி அமைச்சர் பதவி விலகினார்-tamil letter
முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் குற்றம்சாட்டப்பட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா நேற்று தற்காலிகமாக பதவியில் .இருந்து விலகியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலர் மாவை சேனாதிராசாவுக்கு அவர் தனது முடிவை நேற்று அறிவித்துள்ளார்.
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை செய்யப்படும் வரை பதவியில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் குருகுலராசா கூறியுள்ளார்.
விசாரணை அறிக்கையில் கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் இருவரும், தமது விளக்கங்களை அளிப்பதற்கு முதலமைச்சர் நேற்று வரையில் காலஅவகாசம் வழங்கியிருந்தார்.
எனினும், அந்தக் காலஅவகாசத்துக்குள் அவர்கள் தமது விளக்கங்களை அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.