ஷாகிர் நாயக் விவகாரம்: லண்டனிலும் எதிர்ப்பு வெடித்தது!
லண்டன், ஜூன்.16- தடை செய்யப்பட்ட சமயப் பிரசாரகர் ஷாகிர் நாயக் எழுதியுள்ள கையேடுகளை, பிரசித்திபெற்ற டர்ஹாம் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கழகத்தினர், வினியோகம் செய்திருப்பது குறித்து கடும் சர்ச்சை மூண்டது. இதைத் தொடர்ந்து அந்தக் கையேடுகள் வினியோகிக்கப் பட்டதற்காக அக்கழகம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
இஸ்லாம் பற்றி முஸ்லிம் அல்லாதவர்கள் எழுப்பும் பொதுவான கேள்விகள் என்ற தலைப்பில் தீவிரவாத சமயப் பிரசாரகரான ஷாகிர் நாயக் எழுதியிருக்கும் அந்தக் கையேடுகளை, டர்ஹாம் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமியக் கழகம் வினியோகித்துள்ளது.
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக இந்தியாவினால் தேடப்பட்டு வரும் ஷாகிர் நாயக், நடத்தி வந்த அறவாரியத்தையும் அதன் தொலைக்கட்ட்சி சேவையையும் இந்தியா தடை செய்துள்ளது.
மேலும் இவர், இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையேடுகளில் பல்வேறு தீவிரவாதக் கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக ஆளும் கட்சி எம்.பி.யான அண்ட்ரு பிரிட்ஜன் தெரிவித்தார்.
சமுதாயத்திலுள்ள சமூக விரோத சக்திகளுக்கு எதிராக ஒவ்வொரு முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக செயல்படவேண்டும் என்று அந்தக் கையேடுகளில் ஷாகிர் நாயக் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மதிப்புமிக்க நமது கல்விக் கழகங்களில் இதுபோன்ற பிரசாரங்களுக்கு இடமளித்தது தவறு என்று அவர் கண்டித்தார். இவை தவறான பிரசாரம் என்பதை அவர்கள் உணவர்தற்கு முன்பு எத்தனை கையேடுகளை வினியோகித்து இருப்பார்களோ என்று நினைக்கும் போது கவலையாக உள்ளது என்றார் அண்ட்ரூ பிரிட்ஜன்.
இதனிடையே இந்தக் கையேடுகளிலுள்ள கருத்துகள், தங்களுடைய இஸ்லாமிய கழகத்தைப் பிரதிபலிக்காது என்றும் தவறுதலாக இவற்றைத் தாங்கள் வினியோகித்து விட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அதன் தலைவர் முகமட் அலாத்தியா தெரிவித்தார்.