News Update :

Wednesday, June 7, 2017

TamilLetter

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசு அவசர அறிவிப்பு

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசு அவசர அறிவிப்பு



கட்டாரில் இராஜதந்திர நெருக்கடிகள் தொடர்ந்தாலும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவுகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுமென இலங்கை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சவூதி அரேபியா, பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு இராச்சியம், யேமன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தன.
வளைகுடாவில் இடம்பெற்று வரும் இந்த பாரிய குழப்பத்துக்கு மத்தியில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள தனியார் வங்கிகளில் நேற்று காலை கட்டார் ரியால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மறுக்கப்பட்டமையானது பயணிகளிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.
எனினும் நண்பகலளவில் இந்நிலைமை மாறி விமான நிலையத்தின் தனியார் வங்கிகள் கட்டார் ரியாலை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தமையை மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கியின் விமான நிலையக் கிளை அலுவலகங்கள் உறுதிப்படுத்தின.
கட்டார் ரியாலை ஏற்றுக்கொள்ள வேண்டாமென இலங்கை மத்திய வங்கி ஏனைய வங்கிகளுக்கு எவ்வித அறிவிப்பையும் விடுக்காதபோதும் மத்திய வங்கியின் அறிக்கையில் கட்டார் ரியாலை பரிமாற்றம் செய்ய வேண்டாமென குறிப்பிடப்பட்டிருந்ததாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். எனினும் விமான நிலையத்திலுள்ள சம்பத் வங்கியின் கிளை பிரதிநிதி இதுப்பற்றி எவ்வித கருத்தையும் தொலைபேசியில் கூற மறுத்துவிட்டார்.
எவ்வாறாயினும் பண பரிமாற்ற சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்கள் கடந்த மூன்று தினங்களாக கட்டார் ரியால் வாங்குவதனை நிறுத்தியுள்ளனர். எட்டிஹாட் எயார்வேய்ஸ் மற்றும் எமிரேட்ஸ் என்பன கட்டாருக்கான விமானசேவையை நிறுத்திக் கொண்டுள்ளபொதும் டோஹா கட்டாருக்கான விமான சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக சிறிலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.
கட்டார் சர்ச்சைக் காரணமாக இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அவசர நிலைமைகளின்போது கட்டாரில் வாழும் இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவர உடன் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
கட்டாருடன் ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் தமது உறவை முறித்துக் கொண்டுள்ளமையானது அவர்களது பிராந்தியத்துடன் தொடர்புபட்ட விடயமாகும்.
இதனால் இலங்கைக்கு இராஜதந்திர ரீதியாக எவ்வித பாதிப்பும் ஏற்பட மாட்டாது. கட்டாரில் பணிபுரியும் இலங்கையர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்குவார்களாயின் உடனடியாக தூதரகத்துக்கு அறியத்தாருமாறும் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கட்டுநாயக்கா விமானநிலையத்திலுள்ள சில வங்கிகளில் நேற்று காலை கட்டார் ரியால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டபோதும் மத்திய வங்கி அதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கவில்லையென மறுப்பு தெரிவித்திருந்தது.
சில வங்கிகள் தமது விருப்பத்துக்கமையவே கட்டார் ரியாலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளன.எனினும் பின்னர் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் கட்டாருக்கு பொருளாதார தடை விதிப்பது பற்றி இதுவரை எவ்வித யோசனையும் முன்வைக்கப்பட வில்லை என்றாலும் அங்கு தொழில் புரியும் 140,000 பேரினதும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையிலிருந்து கட்டாருக்கு விமான சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-