ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளது ; மஹிந்த வின் கண்டுபிடிப்பு
இனவாதத்தை கட்டுப்படுத்தி நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதற்கு புதிய சட்டங்கள் அவசியமில்லை. அமுலிலுள்ள சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அதனைச் செய்ய முடியும். மேலும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இனவாதத்தைத் தூண்டும் அமைப்புகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொலிஸாருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் அவ்வாறு பொலிஸாருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் பொலிஸாருக்கு தற்போதைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் இனவாதத்தை தூண்டும் அமைப்புகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க முடியும். ஆகவே இனவாத, மதவாத செயற்பாடுகளை பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியும். புதிதாக அதிகாரம் வழங்கப்பட வேண்டிய தேவை இல்லை.
இனவாதத்தை கட்டுப்படுத்தி நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதற்கு புதிய சட்டங்களும் அவசியமில்லை. அமுலிலுள்ள சட்ட ஏற்பாடுகள் மூலம் அத னைச் செய்ய முடியும். எனினும் நாட்டில் சட்டம் ஒழுங்கை பலப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் புதிய சட்டமூலங்களை முன்வைத் தால் அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.
இனவாத மதவாத செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வழிவிட்டு செயற்படுகிறது. ஆனபோதிலும் பொதுபல சேனா அமை ப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடயத்தில் அரசாங்கத்திலுள்ளவர்கள் யதார்த்தத்திற்குப் புறம்பாக எம்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளது. எனினும் அரசாங்கத்தினால் விடயம் ஒன்றுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இயலாமல் போகும்போது எம்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது வழமையாக நிகழ்ந்து வருகிறது. அது தொடர்பில் நாம் கவலையடைகிறோம்.
அத்துடன் ஞானசார தேரரை கைது செய்வதாக இல்லையா என்பது வேறு பிரச்சினை. இருந்த போதிலும் நாட்டில் எழுகின்ற பிரச்சினைகளில் அரசாங்கம் உரிய முறையில் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் அவ்வரசாங்கத்தால் எவ்விதப் பிரயோசனமும் இல்லை என்றார்.