கட்டார் நெருக்கடியை ஏற்படுத்தியது நானே! பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு நானே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது கோரிக்கைக்கு அமைய, கட்டாருடனான உறவினை கைவிடுவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முடிவே இதுவென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதாக குற்றம் சுமத்தி சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரேன், லிபியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் கட்டாருடனான உறவை துண்டித்துள்ளன.
இந்த தீர்மானத்தின் பின்னர் கட்டார் விமான சேவையின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.
எகிப்து மற்றும் பஹ்ரேனும் அவ்வாறான தடை விதிப்பதற்கு ஆயத்தமாகுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டார் விமானங்கள் தமது வான் எல்லைக்குள் பறப்பதற்கு எகிப்து தடை விதித்துள்ளது.
இதேவேளை கட்டார் நெருக்கடி காரணமாக இலங்கையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கட்டாரில் பணி புரியும் 140000 இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அதனை மறுத்துள்ளது.
அதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியாலை மாற்றுவதில் நேற்று பெரும் நெருக்கடி நிலை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.