ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி தாக்குதலில் பலி
டமாஸ்கஸ், ஜூன் 16- சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியும் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவருமான அபு பக்கர் அல்-பாக்தாதி வான்வழி தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக், சிரியா மற்றும் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்தி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்துள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பாக்தாதியை உயிருடனோ அல்லது பிணமாக கொண்டு வரும் நபருக்கு 25 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சிரியா தொலைக்காட்சி பரபரப்பு தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சிரியா நடத்திய வான்வழி தாக்குதலில் பாக்தாதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ரஷ்ய ராணுவமும், ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளது. ரஷ்ய ராணுவ அமைச்சகம் இன்று தெரிவித்த தகவலில் மே மாத இறுதியில், ரஷ்ய ராணுவ தாக்குதலில் அபு பக்கர் அல்-பாக்தாதியுடன் மற்ற மூத்த குழு தளபதிகளும் சேர்ந்து கொல்லப்பட்டார் என தெரிவித்து உள்ளது.
எனினும், இது குறித்து ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. பாக்தாதி உயிரிழந்து விட்டதாக கடந்த சில மாதங்களாக பல வதந்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.