கால்பந்து உலகின் 'சூப்பர் ஸ்டாராக' விளங்கி வரும் கிறிஸ்தியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்த நிலையில் 4-1 என்ற கோல்கணக்கில் ஜுவெண்டஸ் குழுவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் குழு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் சாம்பியனாக வாகைசூடியது.
மேலும் அடுத்தடுத்து சாம்பியன்ஸ் லீக் போட்டியில் வென்று வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஒரே குழு என்ற பெருமையை ரியல் மாட்ரிட் தட்டிச் சென்றது.

முற்பகுதி ஆட்டத்தின் போது ரொனால்டோ முதலில் கோலடித்து தனது ரசிகர்களை உற்சாகத்தில் நீந்தவிட்டார். ஆனால், அது வெகுநேரம் நீடிக்கவில்லை ஜுவெண்டஸ் குழு பதிலடி கொடுத்தது. ஜுவெண்டஸின் முன்னணி ஆட்டக்காரர் மரியோ மண்டுஷுகிச் ஓர் அற்புதமான கோலின் வழி ஆட்டத்தைச் சமமாக்கினார்.
முற்பகுதியில் இரண்டு குழுக்களுமே மாறி மாறித் தாக்குதல்களைத் தொடுத்தன என்றாலும் கோல் அடிக்க முடியவில்லை. பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய பின்னர் ரியல் மாட்ரிட்டின் கை ஓங்கத்தொடங்கியது.

61ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் கேஸ்மிரோ 2ஆவது கோலைப் போட்டு தனது குழுவை வெற்றிப்பாதைக்கு கொண்டுவந்தார்.
இதிலிருந்து மீள்வதற்கு ஜுவெண்டஸ் போராடத் தயாரானது. ஆனால், அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே சூப்பர் ஸ்டார் ரொனால்டோ மேலும் ஒரு கோலைப் போட்டு ஜுவெண்டஸுக்கு மரண அடி கொடுத்தார்.

இந்நிலையில், 84ஆவது நிமிடத்தில் ஜுவெண்டஸ் வீரர் குவாட்ராடோ ஆட்டத்திலிருந்து நடுவரால் வெளியேற்றப்பட்ட நிலையில் அக்குழு மிகவும் பலவீனப்பட்டது. 90ஆவது நிமிடத்தில் அசென்சியோ தனது குழுவின் 4ஆவது கோலை அடிக்க, 4-1 என்ற கோல்கணக்கில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை ரியல் மாட்ரிட் மீண்டும் கைப்பற்றியது.