பிலிப்பைன்ஸ் கப்பல் அமெரிக்க போர்க்கப்பலுடன் மோதல் - 7பேர் மாயம்
வாஷிங்டன், ஜூன்.17- ஜப்பானிய கடலோரத்தில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் அமெரிக்காவின் போர்க்கப்பல் மோதிய விபத்தில் அக்கப்பலைச் சேர்ந்த 7 வீரர்கள் காணாமல் போயினர். போர்க்கப்பலின் முக்கிய கட்டளைத் தளபதி ஒருவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஜப்பானின் கடலோர நகரமான யோக்கோசுக்காவிலிருந்து 56 கடல் மைல்களுக்கு அப்பால் பசிபிக் கடலில் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் ஃபிட்ஷ் ஜெரால்டு, ஒரு சரக்குக் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது கடலில் 7 வீரர்கள் காணாமல் போயுள்ளனர். அக்கப்பலின் முக்கிய தளபதியான பிரிஸ் பென்சன் உள்பட மூவர் காயமடைந்தனர். கடுமையாக காயமடைந்த இந்த மூவரும் ஜப்பானிய ஹெலிகாப்டர் மூலம் யோக்கோசுக்காவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போர்க்கப்பலின் ஒரு பகுதியில் கடல் நீர் புகுந்தது என்றாலும் பின்னர் அதனை வெளியேற்றி கடல் பயணத்தை அக்கப்பல் தொடர்வதற்கு வழிகாணப்பட்டது. இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட சரக்கு கப்பல், பிலிப்பைன்ஸை தளமாக கொண்ட ஏசிஎக்ஸ் கிறிஸ்டல் என்ற கப்பலாகும். இந்தக் கப்பலும் கடுமையான சேதத்திற்கு இலக்காகி இருக்கிறது.