6ஆயிரம்் பொலிஸ் பாதுகாப்புடன் இறுதிப் போட்டி இன்று இரவு 11.00 மணிக்கு
உலகின் தலைசிறந்த இரண்டு கால்பந்து குழுக்களான ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட்டும் இத்தாலியைச் சேர்ந்த ஜூவெண்டசும் இன்று இரவு (இலங்கை நேரம் இன்றிரவு 11 மணிக்கு) சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்தில் மோதுவதை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு அமல்படுத்தப் பட்டுள்ளது.
அண்மையில் மன்செஸ்ட்டர் நகரிலுள்ள இசை அரங்கில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக, இம்முறை கால்பந்து போட்டிக்கு பாதுகாப்புத் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

வேள்சின் தலைநகரான கார்டிப்பிலுள்ள பிரின்சிபிலிட்டி அரங்கத்தில் நடக்கும் இந்த இறுதி ஆட்டத்தை 74,000க்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கத்தில் அமர்ந்து ரசிப்பர். அதேவேளையில், அரங்கத்தைச் சுற்றிலும் சில ஆயிரம் ரசிகர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்கள் இந்நகருக்கு வந்து குவியவுள்ளனர். உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளின் வழி 350 மில்லியன் காலபந்து ரசிகர்கள் கண்டு களிக்கவிருக்கின்றனர்.
சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு எதிராக குறிப்பிட்டு, எந்தவொரு பயங்கரவாத மிரட்டலும் இதுவரை இல்லை என்றாலும் முன்னேற்பாடாக தாங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருப்பதாக வேள்சின் முதன்மை அமைச்சர் கார்வின் ஜோன்ஸ் தெரிவித்தார்.

அரங்கத்தைச் சுற்றிய வீதிகள் அனைத்தும் மூடப்படும் மேலும் டாஃப் ஆற்றிலும் கார்டிப் விரிகுடாவிலும் கடல் போக்குவரத்து அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
சுமார் 6,000 போலீஸ் வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களில் 600 பேர் முழுமையாக ஆயுதந்தாங்கிய அதிரடி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கால்பந்து ஆட்டத்தின் போது அரங்கத்தின் மேற்கூரை முற்றாக மூடப்படும். மூடப்பட்ட அரங்கில் விளையாடு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.
டிரோன் எனப்படும் ஆளில்லாத விமானம் மூலம் வானத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அரங்கத்தின் மேற்கூரை முற்றாக மூடப்படும் என்று அமைச்சர் கார்வின் ஜோன்ஸ் கூறினார்.