News Update :

Wednesday, May 24, 2017

TamilLetter

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் - CPA அறிக்கை

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் - CPA அறிக்கை



முஸ்லீம் மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் குறித்தும், இஸ்லாமை அவமதிக்கும் விதத்திலும் பகைமையை தூண்டும் நோக்கிலும் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்தும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான செயல்களை எந்தவித தயக்கமும் இன்றி கண்டிப்பதுடன், இவ்வாறான தாக்குதல்களுக்கு காரணமானவர்களை உடனடியாக நீதிக்கு முன் நிறுத்துமாறும் அரசாங்கத்தையும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளையும் கேட்டுக்கொள்வதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கோரியுள்ளது.

நாட்டின் அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கம், அமைதி, ஓற்றுமை நிலவுவதே இந்தத் தருணத்தில் அவசியமான விடயமாகும் எனவும் வெறுப்புணர்விற்கும் பிளவிற்கும் இடமில்லை எனவும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கூறியுள்ளது. அரசாங்கம் நேர்மையாகவும் ஊக்கத்துடனும் நல்லிணக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், சமூகங்களுக்கு இடையில் பிரிவினைகள் காணப்படுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதுடன் அந்தக் காயங்களை ஆற்றுவதற்கும் மேலும் பிளவுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் அரசாங்கம் தேசிய மற்றும் சமூக மட்டங்களில் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நல்லாட்சியின் அடிப்படைகளில் ஓன்றான சட்டத்தை நாட்டின் அனைவருக்கும் சமமான விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அச்சமெதுவும் இன்றி, இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாமல், தண்டனை வழங்காமல் தொடர அனுமதித்தால் நாட்டின் அமைதியும் வளமும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கூறியுள்ளது.

இலங்கையின் தற்போதைய சட்ட கட்டமைப்பு இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்குமான பல்வேறு சாதனங்களை சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிற்கு வழங்கியுள்ளது என்பதை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மீளவலியுறுத்துகின்றது எனவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் ஏனைய அமைதி வடிவிலான போராட்டங்களை ஒடுக்குவதற்கே அவ்வாறான கருவிகளை பயன்படுத்தவதும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கண்டுபிடிப்பதற்கும் அதேயளவு ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தாததும் கவலையளிக்கின்றது எனவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அனைத்து சமூகங்களையும் மதநம்பிக்கைகளையும் சேர்ந்த ஏனைய பிரஜைகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் இந்த அச்சம் தரும் ஆபத்தான போக்கை தடுத்து நிறுத்துவதற்கு துணிச்சலுடனும் தூரநோக்குடனும் செயற்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எமது சக பிரஜைகள் எவரும் அச்சத்துடன் வாழக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், மேலும், மத அடிப்படையிலும் வெறுப்புணர்வைத் தூண்ட முயல்பவர்கள் திட்டமிட்டு பரப்பும் பொய்யான தகவல்கள் காரணமாகவும் சக பிரஜைகள் வன்முறையில் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் துரிதமாகவும் சந்தேகத்திற்கு இடமற்றவகையிலும் செயற்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், அரசாங்கம் தான் அனைத்து மக்களும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஓற்றுமையுடன் வாழும் ஐக்கிய இலங்கை குறித்து உறுதியாக உள்ளது பற்றிய செய்தியை செயல் மூலமாகவும் சொல் மூலமாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவிக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-