முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாருக்கு தவம் முறைப்பாடா.............................
(ஜெஸ்லின்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் இயங்கி வரும் அக்கரைப்பற்று சூறா சபையினால் நாட்டில் பரவலாக முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் திட்டமிடப்பட்ட வன்முறைகள் தொடர்பிலான முழு விபரங்கள் மற்றும் ஆதாரங்களை உள்ளடங்கிய ஆவணத் தொகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு கடந்த புதன்கிழமை (24.05.2017) அனுப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த வருடத்தின் கடைப்பகுதியில் தொடங்கி இதுவரை இடம்பெற்றுள்ள சுமார் 20 நிகழ்வுகள் இவ்வாவணத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு இதன் பின்னணியில் இருப்போரின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையாளருக்கு முகவரியிடப்பட்டுள்ள மேற்படி ஆவணம் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.
அரச உயர் அதிகாரிகளின் பக்கசார்பு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் பாராமுகம்இ சட்டத்தை அமுல் நடாத்துவதில் அரசாங்கம் காட்டி வரும் அசட்டைதனம் போன்ற பல்வேறு விடயங்கள் இவ்வாவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்இ இதனைத் தயாரிப்பதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களின் உதவி பெறப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.
மேற்படி விடயம் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு தவம் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது அரசியல்வாதியாக அல்லாமல் சமூகத்தின் அங்கத்தவனாக இருந்து தான் செய்கின்ற எந்தக் கருமத்தையும் பகிரங்கப்படுத்தி அரசியல் லாபம் அடைய விரும்பவில்லை எனவும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற பாத்திரத்தை அவரவர் சரியாக நிறைவேற்றினால் போதுமெனவும், அதற்கான பலனை ஆண்டவன் வழங்குவான் எனவும் கூறினார். மேற்படி ஆவணத்தின் பிரதியொன்றைப் பெற எவ்வளவு முனைந்தும் முடியாமல் போய் விட்டது.