விமானத்தை கடத்த முயற்சித்த போது பயணிகளால் மடக்கிப் பிடிபட்டார்
வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி எம்எச்128 மாஸ் விமானத்தைக் கடத்த முயற்சி செய்த மர்ம ஆசாமியால் பயணிகள் பயத்தில் உறைந்து போயினர். கோலாலம்பூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தபோது நடந்த இச்சம்பவத்தால் மெல்போர்னில் உள்ள துள்ளமரீன் விமான நிலையத்தின் விமான பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டன.
நேற்று இரவு 11.11 மணிக்கு மெல்போர்னிலிருந்து எம்எச்128 விமானம் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டது. விமான கிளம்பிய சிறிது நேரத்தில் விமான நிலைய கோபுரத்தைத் தொடர்புக் கொண்ட விமானி, விமானி அறைக்குள் பயணி ஒருவர் நுழைய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் மூன்று நிமிடங்கள் கழித்து அதே ஆண் விமானி, சம்பந்தப்பட்ட பயணி தன்னிடம் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதாகவும் அவரை மற்ற பயணிகள் பிடித்துக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
தி ஆஸ்திரேலியன் டெய்லி வெளியிட்ட செய்தியில், விமானி மீண்டும் மெல்போர்ன் விமான நிலையத்திற்கே விமானத்தைத் திருப்பபோவதாக கூறியதாக தெரிவித்துள்ளது.
பயணி ஒருவர் மாஸ் விமானத்தைக் கடத்த முயற்சித்ததால் மெல்போர்ன் விமான நிலைய சேவைகள் நிலைக்குத்தின. முன்னமே அறிவிக்கப்பட்டிருந்த பயணங்கள் யாவும் ரத்துச் செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
கடத்தல் முயற்சிக்குப்பின் 20 நிமிடங்கள் கழித்து இரவு 11.41 மணிக்கு எம்எச்128 விமானம் பத்திரமாக மெல்போர்ன் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.