முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டார்?. அக்கரைப்பற்றில் சம்பவம்
அரபாத் இஸ்மாயில்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இயங்கி வரும் குறுந் செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் ஒருவரை முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தாக்கியதாக அறிய முடிகிறது.
முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனால் ஏற்பாடு செய்யப்பட்ட சட்டத்தரணிகள் பாராட்டு விழா சில தினங்களுக்கு முன் அக்கரைப்பற்றில் இடம் பெற்றது.இவ் விழா நடைபெறும் தினத்தன்று குறித்த ஊடகம் இவ் விழா நடைபெறாது என செய்தி வெளியிட்டிருந்தது.இதற்கெதிராக ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த முக்கிய நபர் தொலைபேசி ஊடாக செய்தி ஆசிரியரோடு முரண்பட்டிருந்தார்.
மீண்டும் அதே குறித்த ஊடகம் இந் நிகழ்வைப்பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தது.குறித்த நிகழ்வுக்கு பதிலாக வேறு நிகழ்வை நடாத்தியதாகவும் கூறிப்பிட்டிருந்தது.
இச் செய்தி முற்று முழுதாக பொய்யானதெனவும் வேண்டுமென்றே எமது அமைப்பை அரசியல் நோக்கம் கருதி மக்கள் மத்தியில் பொய்யான வதந்திகளை இந் நிறுவனம் பரப்புகின்றது எனவும் நிகழ்வை நடாத்தியவர்களால் குற்றம் சாட்டப்பட்டது.
இச் சந்தர்ப்பத்தில் நேற்று(14) அக்கரைப்பற்று பிரதான வீதியில் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனும் குறித்த ஊடக நிறுவனத்தின் செய்தி ஆசிரியரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.செய்தி தொடர்பாக இரண்டு பேரும் வாய்த்தர்க்கம் புரிந்துள்ளனர்.இதில் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் செய்தி ஆசிரியரை கைகளால் தாக்கியதாக கூறப்படுகின்றது.
ஆனால் முன்னாள் அமைச்சர் என்னை கைகளால் தாக்கவில்லை என்றும் கெட்ட வார்த்தைகளால் மாத்திரமே திட்டியதாகவுமே கூறியுள்ளார்.
இதே வேளை முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் நேற்றிரவு குறித்த செய்தியாளரிடம் மன்னிப்பு கோரியதாகவும் அன்பை வெளிப்படுத்தும் முகமாக பழங்கள் வாங்கி அனுப்பியதாகவும் அனுப்பப்பட்ட பழங்களை செய்தி ஆசிரியர் ஏற்றுக் கொண்டதாகவும் அறிய முடிகிறது.