News Update :

Saturday, May 27, 2017

TamilLetter

முஸ்லிம்களின் முக்கியமான பிரச்சனைகளும் மு.கா. வின் தலைமைத்துவமும் -சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்-

முஸ்லிம்களின் முக்கியமான பிரச்சனைகளும் மு.கா. வின் தலைமைத்துவமும்
  -சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்-அண்மைக் காலமாக நம் நாட்டில் நமக்கு எதிராக பேரினவாத சக்திகளில் சிக்குண்ட சிலர் மிகவும் மோசமாகவும் அடாத்தாகவும் அநியாயமாகவும் நடந்து கொள்வதை நாம் அறிவோம்.

 இது தொடர்பாக நமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதன் தலைவர்களும் ஜம்மியத்துள் உலமா, முஸ்லிம் கவுன்சில், உலமா சபை, சூறா கவுன்சில் உட்பட ஏனையவர்களும் ஒன்றுபட்டு உடனடியாக தங்களால் முடிந்தவைகளை கூடுமானவரை பல்வேறு முயற்சிகள் செய்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருவதையெல்லாம் நாம் எல்லோரும் நன்கு அறிந்த  தெரிந்த விடயங்கள்தான். 
இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி மிகவும் தீவிரமாக சிந்தித்து மும்முரமாக முயற்சி செய்து முயன்றும் வருகின்றார்கள். இதில் எவ்வித கட்சி வேறுபாடுகளுமின்றி ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயல்பட்டுவருவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன் அவர்களுக்கு நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளளோம் என  சிரேஷ்ட சட்டத்தரணியும் முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக பொதுச் செயலாளரும் அரசியல் விவகார உயர்பீட பணிப்பாளருமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் தனது அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் எம்மால் இயன்றவரைதான் இயங்கமுடியும் என்பதை நாம் மறுக்கமுடியாது. அதற்காக அவசரப்பட்டு ஆத்திரத்தில் ஆபத்தில் விழாமலும் எங்களை நாம் பாதுகாக்க நன்கு சிந்தித்தும் செயற்பட வேணடியுமுள்ளது. மேலும் இனக்கலவரங்கள் ஏற்படாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. என்பதே பலரின் பரவலான கருத்தாகும். 

இந்த வகையில் முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான கௌரவ றவூப்  ஹக்கீம் அவர்கள் முழுமூச்சாக நின்று தொடர்ந்து அரசிற்கு எதிராக அவ்வப்போது அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக அண்மைக்காலமாக இப் பேரினவாத சக்திகளின் போக்கு பற்றி அமைச்சரவையிலும் பாராளமன்றத்திலும் குரல் கொடுத்து வருகின்றார். விசேடமாக அவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகவும் ஆழமானதும் ஆணித்தரமானதும் அழகான ஆங்கில புலமையுடன் அற்புதமான அறிவுரைகளுடன் ஒரு பழுத்த அரசியல்வாதி போல் பல அனுபவங்களையும் சரித்திர சம்பவங்களையும் உள்ளடக்கியதாகவும் உதாரணங்களுடன் மேற்கோள் காட்டிய  அவ்வுரை அமைந்திருந்தது. இது இன்று எல்லோராலும் பரவலாக பாராட்டப்படுவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். 

இப் பாராளுமன்ற உரை தற்பொழுது இணையத்தளங்களிலும் வலம் வந்துகொண்டிருக்கின்றது. இதனை பார்க்காதவர்களும் கேட்காதவர்களும் மீண்டும் கேட்டும் பார்த்தும் இந்த உண்மைகளை உணர்ந்துகொள்ளலாம். அதற்காக நான் தனிப்பட்ட முறையில் தலைவருக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். 

ஏனெனில் காங்கிரஸ் கட்சி கரிசனையுடன்தான் அன்றுதொட்டு இன்றுவரையும் இப்படியான பிரச்சினைகளுக்கு முற்றுமுழுதாக முகம் கொடுத்து செயல்பட்டு வந்துள்ளது என்பது வரலாறு என்பதை நாம் எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்காக தான் இவ் அறிக்கை மூலம் இவைகளை இன்று மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் என சட்டத்தரணி கபூர் அவர்கள் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-