News Update :

Monday, May 8, 2017

TamilLetter

18 வயதில் தனது 40 வயது டீச்சரை மணந்தவர் பிரான்ஸ் அதிபர்


பிரான்சின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இமானுவெல் மக்ரோன், பள்ளி பருவத்தில், அதாவது 17 வயதில் தன்னைவிட 24 வயது மூத்தவரான தனது ஆசிரியையை காதலிக்க ஆரம்பித்து பின்னர் அவரையே திருமணம் செய்துகொண்டவர்...!
தற்போது 64 வயதை எட்டிவிட்ட பிரிஜிட் மக்ரோன், பிரான்சின் முதல் பெண்மணியாக இருக்கிறார்.
"எனது நிர்வாகத்தில் என்னுடைய மனைவிக்கு வேலை தருவேன். அவர் வேலை செய்வார். ஆனால், சம்பளம் பெறமாட்டார்" என்று தம்முடைய தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மக்ரோன் தெரிவித்தார்.
39 வயதுடைய புதிய அதிபருக்கும் அவரது முன்னாள் இலக்கிய, நாடக ஆசிரியரரான பிரிஜிட்டிற்கும் இடையிலானா காதல் கதை மிக வித்தியாசமானது.
மக்ரோனின் சொந்த ஊரானான எமியென் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பிரிஜிட் பணிபுரிந்தார். இவரது நாடகம் ஒன்றில் 15 வயது மாணவனான மக்ரோன் நடித்தார். அந்த மாணவனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார் பிரிஜிட். 
பள்ளி பருவத்தில் இருந்தே தன்னை விட மிக மூத்த வயதினருடன் அதிகமாக பேசிப் பழகி நட்பை வளர்த்துக் கொள்ளக்கூடிய பழக்கம் கொண்டவர் மக்ரோன். இயல்பாகவும் கூச்சமில்லாமலும் தெளிவாகவும் பேசும் ஆற்றல் அவருக்கு சின்ன வயதிலேயே இருந்ததால் யாரையும் எளிதாக கவர்ந்து விடுவார்.
15 வயதிலேயே தன்னுடைய டீச்சர் பிரிஜிட் மீது மக்ரோனுக்கு மயக்கம் என்கிறார் அவருடைய பள்ளித் தோழர் ஒருவர். எப்போதும் டீச்சரை தேடிச் சென்று நிறைய அவருடன் பேச முயல்வார். ஆனால், மக்ரோனுக்கு தன் மீது ஒருவகை காதல் மயக்கம் இருப்பதை மக்ரோனின் 17ஆவது வயதில்தான் பிரிஜிட் புரிந்து கொண்டார்.
அப்போது அவர் திருமணமானவர். மக்ரோனிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார். ஆனால், பதின்மவயது பையனாக இருந்தாலும் மக்ரோன் தெளிவாக இருந்தார் என்கிறார் பிரிஜிட்.
கால ஓட்டத்தில் இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. தன்னை விட 24 வயது குறைந்த இளைஞனுடன் காதலா? என நினைத்த போது பிரிஜிட்டிற்கு சற்று சங்கடமாகத்தான் இருந்தது.
இந்த விவகாரம் மக்ரோனின் பெற்றோருக்குத் தெரிய வந்தபோது ஆவேசம் அடைந்தனர். கடும் எதிர்ப்பைக் காட்டியதோடு 18 வயது முடியும் வரை மக்ரோனை நெருங்கவே கூடாது என்று பிரிஜிட்டை எச்சரிக்கவும் செய்தனர்.
பின்னர் இந்தக் காதலைப் பிரிக்க, பள்ளியின் கடைசி ஆண்டில் மக்ரோனை அவரது பெற்றோர்கள் பாரிஸ் நகருக்கு அனுப்பி அங்கு படிக்கவைத்தனர். இந்நிலையில் இவர்களின் காதல் முறிந்து விட்டதாக பலரும் கருதினர்.
அது புறத்தோற்றத்திற்கு முறிந்ததாக இருந்தாலும் அது தொடரவே செய்தது.
மூன்று குழந்தைகளுக்கு தாயான பிரிஜிட், தனது காதலனான மக்ரோன், 18 வயதைத் தாண்டியதும் கணவரைப் பிரிந்தார். பாரிஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். மக்ரோனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.
இவர்கள் இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டனர். இந்த இரண்டு திருமணங்கள் மூலம் பிரிஜிட்டிற்கு இப்போது 7 பிள்ளைகள். அதுமட்டுமல்ல, அவருக்கு இப்போது 3 பேரப்பிள்ளகளும்  இருக்கிறார்கள்.
"எங்களின் திருமணம் பலருக்கு பல மாதிரியாக இருந்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. 17 வயதில் 40 வயதான என்னிடம் தன்னுடைய திருமண விருப்பத்தை முன்மொழிந்தார் மக்ரோன். முதலில் இது எனக்கு வேடிக்கையாக இருந்தது என்கிறார் பிரிஜிட். 
எனினும், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஏற்கும்படி செய்த சாதுர்யமும் விவேகமும் மக்ரோனுக்கே உரியது என்றார் அவர்.
இதணிடையே மக்ரோனின் அரசியல் வெற்றிக்கு பிரிஜிட்டின் பங்கு மிக முக்கியமானது. அவர் இல்லையேல், இன்று நான் அதிபராகி இருக்க மாட்டேன் என்கிறார் மக்ரோன்.
அரசியல் மேடைகளில் எப்படிப் பேச வேண்டும்/, உரையை எப்படித் தயாரிக்க வேண்டும்? என்பது உள்பட பல விஷயங்களை மக்ரோனுக்கு கற்றுத்தந்தவர் பிரிஜிட்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-