அப்பாவி மக்களுக்கு எதிராக விஷ இரசாயன வாயுத் தாக்குதல் நடத்திய சிரியா இராணுவத்தின் இலக்கு மீது அமெரிக்கா சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இட்லிப் நகரின் மீது இரு தினங்களுக்கு முன்பு இராசயன வாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பலர் மாண்டனர். மாண்டவர்களில் குழந்தைகளே அதிகம். மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி வாயில் நுரைத்தள்ளி அவர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியது அதிபர் பாஷர் அல் அசாத்தின் சிரியா இராணுவம் தான் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில் சிரியாவின் இராணுவ விமானத் தளம் ஒன்றுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது.
ஷாய்ராத் எனப்படும் அந்த இராணுவத் தளத்திலிருந்துதான் சிரியா விமானங்கள் புறப்பட்டுச் சென்று, இட்லிப் நகரின் மீது விஷ வாயுத் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படுவதால், அந்த விமான நிலையத்தை அமெரிக்கா தகர்த்தது.
மத்திய தரைக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலில் இருந்து சரமாரியாக பாய்ந்து சென்ற 50 'டோமாஹவ்க்' ரக ஏவுகணைகள் குறிப்பிட்ட சிரியாவின் இலக்கை தாக்கியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கு எதிரான இந்தத் தாக்குதலுக்கு தாம் உத்தரவிட்டதாக அவர் சொன்னார்.
இதனிடையே அப்பாவி மக்களுக்கு எதிராக 'சாரீன்' எனப்படும் ஒரு வகை விஷ வாயு பயன்படுத்தப் பட்டிருப்பதாக இரசாயன நிபுணர்கள் கூறியுள்ளனர்.