News Update :

Thursday, April 6, 2017

TamilLetter

இறக்காமம் அவலமும் கிழக்கின் அதிகாரமும்



பர்வீஸ் சத்தார்
முஸ்லிம்  பூர்வீக கிராமங்களில் ஒன்றான இறக்காமம்  வானகமுவ பள்ளிவாசல் ஏற்பாடு செய்து வழங்கப்பட்ட   கந்துாரி    உணவு அஜீரணமானதால்   மூன்று உயிரிழப்பு உட்பட 300 க்கும் அதிகமான மக்கள் இன்னும்  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியான  மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதில் 85  நோயாளிகள் இறக்காமம் வைத்திசாலையிலும்   ஏனையோர் அக்கரைப்பற்று,அம்பாரை வைத்தியசாலைகளிலும் மாற்றப்பட்டு மேலதிக      சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

1947ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இறக்காமம் வைத்தியசாலை     பௌதீக வளப்பற்றாக்குறை,ஆளணி பற்றாக்குறையுடன்      மூன்று வைத்தியர்களுடன் காணப்படுகின்றது

பாதிக்கப்பட்ட மக்களை இறக்காமம் வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையில் இருந்துள்ளார்.பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டதால் ஒரு வைத்தியரால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது..அத்தோடு நோயாளிகள் வைத்தியசாலையின் வளாகத்தில் படங்கு விரித்து அமர்த்தப்பட்டனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இவ் வைத்தியசாலை காணப்படுவதால் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருத்தரே   கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவுள்ளார்.அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சராகவும்  முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தர் உள்ளார்.

இருந்த போதும்   கிழக்கில் இப்படியான அதிகாரங்களை வைத்துக் கொண்டுள்ள இவர்களால் ஒரு வைத்தியசாலையின் அடிப்படை பிரச்சினைகளைக் கூட தீர்த்து வைக்க முடியாமல் போகின்றது.

அத்தோடு கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் இவ் வைத்தியசாலையின் தேவைகளை புர்த்தி செய்வதற்கு இதுவரை காலமும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் ஒரு கேள்வியே.சுகாதார பணிப்பாளரும் ஒரு முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் கோடிக் கணக்கில் பணங்களை தனது அரசியல் எதிர்காலத்திற்காக செலவிட்டு வருகின்றார்.அவரின் சொந்த ஊரான ஏறாவுரில் எத்தனையோ அபிவிருத்தி திட்டங்களை செய்து வரும் வேளை அவ் அபிவிருத்தி திட்டங்கள் முதன்மையானதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாத்தில் இப்படியான குறைபாடுள்ள எத்தனையோ வைத்தியசாலைகள் இருக்கின்ற வேளையில் அதற்கு முக்கியத்துவம் வழங்காமல் வாக்குகளை குறிவைத்து திட்டங்களை செயற்படுத்துவதனால் எந்தவித பயனும் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை.

எதிர் காலத்தில் ஒரு பிரதேசத்திற்கான முதலமைச்சரை விட்டு விட்டு மாகாணத்திற்கான முதலமைச்சராக ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-