News Update :

Friday, April 21, 2017

TamilLetter

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் முக்கிய ஒரு நேர்காணல்மகிந்த ராஜபக்ஸ 2005 முதல் 2015 வரை ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக இருந்தவர். தொழில் முறையில் அவர் ஒரு மனித உரிமைகள் சட்டத்தரணி, ஆனால் ஸ்ரீலங்கா ஆயுதப் படைகள் மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதலை கண்டுபிடித்த, சிறுவர்களை கட்டாயப்படுத்தி படையில் இணைத்த மற்றும் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற ஆயுதமேந்திய பிரிவினைவாத குழுவுக்கு எதிராக 30 வருடங்களாக நடத்திய உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், ஸ்ரீலங்கா படைகளின் பரந்தளவு சீற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் பற்றிய கண்டனங்கள் என்பனவற்றின் விமர்சனங்களுக்கு காரணமாக இருந்தார். 2015ல் ஏற்பட்ட தேர்தல் தோல்வியில் இருந்து அவரது முதல் உலகளாவிய தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் வியோன்(டபிள்யு.ஐ.ஓ,என்) தொலைக்காட்சியின் மூத்த சர்வதேச நிருபர் பத்மா ராவ் சுந்தர்ஜி யுடன் “வேல்ட் இஸ் வண் : உலகளாவிய தலைவர்கள்” என்கிற நிகழ்ச்சித் தொடருக்காக கொழும்பிலுள்ள அவரது வீட்டில் இருந்து உரையாடினார்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களே, உங்களை திரும்பவும் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னையும் வியோனையும் இந்த பிரத்தியேக நேர்காணலுக்காக வரவேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் இந்தியா - சீனா - பாகிஸ்தான் போன்ற பிராந்தியங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன். ஸ்ரீலங்கா இன்று சீனாவுக்கான வெளிநாட்டுக் கடனில் மூழ்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கீழுள்ள அரசாங்கம் பெரியளவிலான அழுத்தத்தை அடைந்துள்ளது. அது சீனாவுக்கு, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 விகித பங்குகள் மற்றும் அதற்கு அருகிலுள்ள 1500 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. உங்களை விமர்சிப்பவர்கள் உங்கள் அரசாங்கம் சீனாவில் தங்கியிருக்க ஆரம்பித்ததால்தான் என்றும் மற்றும் உங்கள் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள தற்போதைய அரசாங்கத்தின்மீதும் பழி சுமத்தியும் வருகிறார்கள். எந்த வழியிலும் இந்தியா இதையிட்டு மகிழ்ச்சி அடையவில்லை. இதில் அதிகம் பொறுப்பு யாருடையது?
மகிந்த ராஜபக்ஸ: அவர்கள் நாங்கள்தான் பொறுப்பு என்கிறார்கள் மற்றும் நாங்கள் அவர்கள்தான் இதற்கு பொறுப்பு என்கிறோம். இன்னும்கூட சிலர் இந்தியாதான் பொறுப்பு என்கிறார்கள். நாங்கள் ஆசியாவை நோக்கி எங்கள் நாடுகள் மீள்ஒழுங்கமைக்கப் படவேண்டும்  என்று மனப்பூர்வமாக முடிவெடுத்தோம், உண்மையில் அதன் அர்த்தம் இரண்டு சக்திவாய்ந்த நாடுகளான இந்தியா மற்றும் சீனா என்பதே. நாங்கள் இதை பல காரணங்களுக்காகச் செய்தோம். முதலாவதாக நாங்கள் எங்களை ஆசியர்கள் என அடையாளப்படுத்துகிறோம் அதனால் எங்கள் விதி அந்த ஆசியாக் கண்டத்தின் ஒரு பகுதியாக அடையாளம் காட்டப்படுகிறது.
இரண்டாவதாக ஆசியா எங்கள் நாகரீகம் மற்றும் கலாச்சாரம் என்பனவற்றுக்கு சௌகரியமான ஒரு வலயம் ஆகும். மூன்றாவது, நாங்கள் ஆசியாவை எங்களைப் பாதுகாப்பதற்காகவும் மற்றும் எங்கள் தேசத்தின் இறையாண்மைக்கு  பிராந்தியத்துக்கு வெளியில் இருந்து வரும் எதிர் அழுத்தங்களை சமநிலை செய்வதற்கு உதவுவதாகவும் பார்க்கிறோம். ஆசியா, அதன் இரண்டு பெரிய அசுர சக்திகளான இந்தியா மற்றும் சீனா என்பனவற்றின் வளர்ச்சியினால்  உந்தப்படும் பொருளாதார எழுச்சியினால் இலாபமடையும் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம். ஆனால் எனது அரசாங்கம் சீனாவில் தங்கியிருக்கவில்லை - இதை கட்டாயம் நான் உங்களிடம் சொல்லவேண்டும். எல்லாத் திட்டங்களும் இலாபம் ஈட்டுபவையாகவே இருந்தன. கடனை திருப்பிச் செலுத்துவது வணிக ரீதியாக சாத்தியமானதாகவே இருந்தது. அம்பாந்தோட்டை கடல் துறைமகத்தை எடுத்துக் கொண்டால், முதலில் நான் இந்தியாவுக்குச் சென்று எனக்கு அந்த இடத்தில் ஒரு துறைமுகம் வேண்டும் மற்றும் அவர்களால் அதற்கு தயவாக உதவமுடியுமா என்று கேட்டேன். ஆனால் உங்களுக்கு இந்தியாவின் வழி பற்றித் தெரியும்தானே. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது, ஏனென்றால் இதில் தனியார் துறை சம்பந்தப் பட்டிருந்தது. அதனால் அதற்கு சிவப்பு நாடா போன்ற தடைகள் இருந்தன. மொத்தத்தில் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை, ஏனென்றால் ஸ்ரீலங்காவில் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது, வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் இதர பகுதிகளிலும் கூட அது இடம்பிடித்திருந்தது.
அப்போ நான் நினைக்கிறேன் 2006ல் என்று, நான் சீனாவுக்குப் போனேன். அங்கு நான் துறைமுகம் பற்றி பேச்சவார்த்தை நடத்தினேன். அவர்கள் அந்த வருடமே உடனே அதைத் தந்தார்கள். ஆனால் அது கடன் அடிப்படையில் ஆனது ஏனென்றால் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என நாங்கள் அறிந்திருந்தோம். நாங்கள் அவர்களைச்(சீனா) சார்ந்திருக்கவில்லை. அது ஒரு நேரடிக் கடன் அதற்காக நாங்கள் துறைமுகத்தை அவர்களிடம் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகும் மற்றும் இரண்டாவது மூன்றாவது கட்டங்களின் போதும் அவர்களுடன் நாங்கள் வழங்கல் - செயற்படுத்தல் - மாற்றுதல் அடிப்படையில் பேச்சு நடத்தினோம். ஆனால் அது முனையங்களுக்கு மட்டுமே துறைமுகத்துக்கு அல்ல. மற்றும் முனையங்களில் கூட அவர்கள் நிலத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. தற்போதைய அரசாங்கம் கொடுத்தது போல நிலங்களை அவர்களுக்கு நாங்கள் கொடுக்கவில்லை. துரதிருஷ்டவசமாக இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை அப்படியாக இருக்கிறது. அவர்கள் பதவிக்கு வந்த உடனேயே அவர்கள் இந்த ஒப்பந்தங்கள் மற்றும், சீனாவுடனான இந்த உடன்படிக்கைகள் எல்லாவற்றையும் இரத்து செய்தார்கள் மற்றும் இது பீஜிங்கிற்கு ஆத்திரமூட்டியது. ஆதன்பின் நிச்சயமாக எல்லாம் மாற்றமடைந்தது. இப்போது இவர்கள் 15,000 ஏக்கர்களைக் கொடுக்கிறார்கள் - நாங்கள் அப்படியான எதையும் அவர்களுக்கு கொடுக்கவில்லை. அவர்கள் இப்பொழுது செய்வது எல்லாவற்றையும் - அவர்கள் நாட்டை விற்கிறார்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: சீனா ஸ்ரீலங்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி மற்றும் மிகப் பெரிய முதலீட்டாளர். சில ஸ்ரீலங்காவாசிகள் கூட சீனா மெதுவாக உங்கள் நாட்டை காலனித்துவப் படுத்துவதாகச் சொல்கிறார்கள். நீங்கள் மற்றும் உங்களுக்கு ஆதரவளிக்கும் பிரிவினர் எல்லோருமாக சீனாவுடனான அம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை எதிர்க்கிறீர்கள். மற்றும் இன்னும் உங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா மே மாதத்தில் சீனாவுக்கு செல்லும்போது அந்த ஒப்பந்தத்தை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கொழும்பு துறைமுக நகரமும் கூட முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மற்றும் அதன் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவதின் மூலம் சீனா ஏற்கனவே ஸ்ரீலங்கா மற்றும் இந்து சமுத்தி பிரதேசம் ஆகியவற்றில் தனக்கு மிகப் பெரிய மூலோபாய நலன்கள் உள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது. சீனாவால் ஸ்ரீலங்கா ஒரு காலனித்துவ பிரதேசமாக மாற்றும் நடவடிக்கையை மாற்றியமைப்பதற்கு காலதாமதம் ஆகிவிட்டதா?
மகிந்த ராஜபக்ஸ: எங்கள் காலத்தில் காலனித்துவம் போன்ற எந்த திட்டமும் இருக்கவில்லை. சீனா ஒரு மதிப்புமிக்க நண்பராகவும் மற்றும் அபிவிருத்தியில் ஒரு பங்காளியாகவுமே உள்ளது, அவ்வளவுதான். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறைக்கும் மற்றும் எங்களுடையதுக்கும் இடையே கணிசமானளவு வித்தியாசம் உள்ளது. சீனத்திட்டங்கள் யாவும் கடந்த அரசாங்கத்தின் (எங்களுடைய) காலத்தில் நான் விளக்கிய கட்டமைப்புகளின்படி பேச்சு வர்hத்தைகள் நடத்தப்பட்டவையாகும். அபமபாந்தோட்டையை பொறுத்தவரை அது விநியோகம் - செயற்பாடு - மாற்றம் என்பனவற்றின் அடிப்படையில் முனையங்கள் மற்றும் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன. எனவே அங்கு காலனித்துவம் போன்ற பேச்சுக்களுக்கு இடமிருக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் அந்த கொள்கைகளை எல்லாம் மாற்றிவிட்டது. அதனால்தான் இவை எல்லாம் நடைபெறுகின்றன.
பத்மா ராவ் சுந்தர்ஜி: தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு (எல்.ரீ.ரீ.ஈ) அவர்களுக்கு எதிராக  ஒரு கொடிய உள்நாட்டு யுத்தம் 30 வருடங்களாக நடத்தப்பட்டது. உங்கள் அரசாங்கம் ஆயுதங்கள், பயிற்சி ஏன் விமானங்களைக் கூட சீனா மற்றும் பாகிஸ்தான் என்பனவற்றிடம் இருந்து பெற்றுக்கொண்டது. அந்த நேரத்தில் உதவி செய்யும்படி இந்தியாவிடம் கேட்டீர்களா மற்றும் அப்படியானால் புது டெல்லி எப்படி நடந்துகொண்டது?
மகிந்த ராஜபக்ஸ: ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள். நாங்கள் கேட்கவேண்டியதாக இருக்கவில்லை. ஏனென்றால் நான் போரிடடுக் கொண்டிருந்தது உங்களின் போர், இந்தியாவின் போர், உண்மையில் என்னுடையதல்ல. எல்.ரீ.ரீ.ஈ உங்கள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது மற்றும் இந்தியாவில் உள்ள பலரை கொலை செய்தது, உங்கள் மண்ணில் வைத்து எங்களுடையதில் இல்லை. அந்த வழியில் அது என்னுடைய யுத்தம் மட்டுமல்ல அது இந்தியாவின் யுத்தம், ஒரு மனிதாபிமான யுத்தம். சாத்தியமான அனைத்து வழிகளிலும் இந்தியா எங்களுக்கு உதவி செய்தது. நாங்கள் அதை விளம்பரப்படுத்த விரும்பவில்லை, பத்திரிகைகளுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. மற்றும் சீனா பாகிஸ்தான் மட்டுமல்ல  பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் கூட உதவி செய்தார்கள்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது, பெரும்பாலும் இந்தியாவை இலக்கு வைத்துள்ளது. மாலைதீவு கூட தெற்காசியாவில் அதிகளவிலான இஸ்லாமிய நாட்டு ஆட்சேர்ப்பாளர்களின் வீடாக உள்ளது. மற்றும் அவர்கள் விரைவாக சவுதியின் வகாப்பிஸத்தின் செல்வாக்குக்கு ஆட்படுகிறார்கள். பங்களாதேஷ் ஐ.எஸ் பயங்கரவாதம் மற்றும் ஸ்லீப்பர் செல்களை பார்த்து விட்டது.உங்கள் நீதி அமைச்சர் சமீபத்தில் 31 உயரடுக்கு முஸ்லிம்கள்கூட ஐ.எஸ் இல் இணைந்திருப்பதாகச் சொன்னார். இவைகள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, இந்தப் பிராந்தியத்தில் இஸ்லாமிய பயங்கரவாதததினால ஏற்படும் ஆபத்தை அலட்சியம் செய்வதைக் காட்டிலும், ஸ்ரீலங்கா இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது நிச்சயமாக சிறந்தது இல்லையா?
மகிந்த ராஜபக்ஸ: எங்கள் அயல்வக்கத்தில் உள்ள எல்லா நாடுகளுடனும் நாங்கள் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என நம்புகிறோம், இதை நான் கட்டாயம் உங்களிடம் சொல்ல வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே தங்களால் இயன்றளவு சிறப்பாக எங்களுக்கு உதவி உள்ளார்கள். மரபு ரீதியாக இரண்டு நாடுகளுடனும் நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். மற்றும் அந்த நட்பு பரஸ்பரம் பிரத்தியேகமானதாகவோ மற்றும் முரண்பாடானதாகவும் இருக்காது, அதாவது ஒருவருடானான நட்பு மற்றவரின் நட்டத்தில் இல்லை. நாங்கள் எங்கள் பிரஜைகளின் இஸ்லாமிய நம்பிக்கை உணர்வுகளை நாம் கவனத்தில் கொள்கிறோம். எங்கள் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இஸ்லாமிய உலகின் நெருங்கிய நண்பராக இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். நிச்சயமாக எங்களுக்கு ஒரே அயல்நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. அது ஒரு உப கண்டம் மற்றும் எங்கள் தமிழ் குடிமக்கள் கலாச்சார மொழியியல் மற்றும் நாகரீக தொடர்புகளைக் கொண்டுள்ளார்கள். இவை எல்லா காரணங்களாலும் இந்தியாவுடனான எங்கள் நட்பு மற்றும் உறவு என்பன பெரிதும் விசேடமானது. தனித்துமானது கூட என்றுதான் சொல்லவேண்டும்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: திரு. ராஜபக்ஸ அவர்களே, உங்களது வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்களின் சுயாட்சிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் கொண்டு வருவதாக நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் 13வது திருத்தம் என அழைக்கப்படும் திருத்தத்தை கொண்டுவர இந்தியா வலியுறத்தியது, அதை ராஜீவ் காந்தியின் அரசாங்கம் இணைந்து எழுதி அதனை இரு தரப்பினரும் 1987ல் கைச்சாத்திட்டனர். 30 வருடங்கள் கடந்த பின்னும் அதுதான் சிறந்த தீர்வா?
மகிந்த ராஜபக்ஸ: அதுதான் சிறந்த தீர்வு என்று நான் சொல்ல மாட்டேன். அது அப்படியிருந்தால் இப்போதைக்கு பிரச்சினை வெற்றிகரமாக தீர்ந்திருக்க வேண்டும். ஒரு தீர்வினைத் தருவதற்கு அனைத்து சமூகங்களும் ஒருமித்து செல்லவேண்டும் என்பதை கட்டாயம் நாங்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஒரு பிரிவினரையோ அல்லது ஒரு சமூகத்தவரையோ திருப்திப்படுத்தும் ஒரு தீர்வை கொண்டுவர முடியாது. நாங்கள் அனைவரையும் திருப்திப் படுத்த வேண்டும்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: மீனவர்கள் பிரச்சினை மற்றும் கச்சதீவு உடன்படிக்கை என்பன இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் தினசரி தலைப்புச் செய்திகளாக மாறி வருகிறதே. இவை இரண்டுக்குமான அடிப்படை என்ன எல்லா நேரத்துக்கும் ஏற்றபடி அவைகளை எப்படித் தீர்க்க முடியும்?
மகிந்த ராஜபக்ஸ: மீனவர்கள் எப்போதும் மீனையே பின் தொடர்வார்கள், அவர்கள் எல்லைகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் இதை நிறுத்துவது எங்கள் கடமை - அதாவது கொழும்பு மற்றும் டெல்லியுடைய - கடமை, அப்படிச் செய்வதற்கான அரசியல் விருப்பம் எங்களுக்கு வேண்டும். இந்திய மீனவாகள் இங்கு வந்து கடற்படுக்கையில் உள்ள எல்லாமீன்களையும் இழுவைப் படகுகள் மூலம் பறிப்த்துச் செல்கிறார்கள். எனவே இது நிறுத்தப்பட வேண்டும். இதை நிறுத்துவதற்கான அரசியல் விருப்பம் டெல்லிக்கு வரவேண்டும்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: நீங்கள் இந்தியாவை குறிப்பாக அதன் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவினை (ரோ), 2015ல் உங்கள் தேர்தல் தோல்வியை இயக்கியதாக குற்றம் சாட்டினீர்கள். அது எப்படி?
மகிந்த ராஜபக்ஸ: (சிரிக்கிறார்) உங்களுக்கு தெரியுமா, நான் கடந்த காலத்துக்கு செல்ல விரும்பவில்லை. நடந்தது நடந்தாக இருக்கட்டும். இப்பொழுது ஒரு புதிய பக்கம் உள்ளது.
பத்மா ராவ் சுந்தர்ஜி: ஒன்றில் உங்களுக்கு ஆதரவளிக்கும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரிவினராலோ அல்லது வேறு புதிய கட்சியினாலோ நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முன்பு நீங்கள் ஆட்சியில் இருந்தபோது மிகவும் பதட்டமான நிலையில் இருந்த இந்தியாவுடனான உங்கள் உறவை மீண்டும் சீரமைப்பீர்களா?
மகிந்த ராஜபக்ஸ: வெளிப்படையாகச் சொல்வதானால், என்னுடைய அரசாங்கம் மற்றும் தற்போதுள்ள அரசாங்கம் ஆகிய இரண்டும் மற்றும் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவுடையதைப் போன்ற முந்தைய அரசாங்கங்கள் ஆகிய அனைத்துமே பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாடங்களைப் படித்துள்ளன என்று நான் நினைக்கிறேன.;. ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுடன் பகைத்துக்கொள்ள முடியாது என்பதை உணர்வதில் ஸ்ரீலங்காவின் எந்த அரசாங்கத்தாலும் தவறிழைக்க முடியாது. இப்போது நாங்கள் எங்கள் பாடங்களைப் படித்தவிட்டோம். எனவே இந்த இரண்டுக்கும் இடையேயான சமநிலையை மிகவும் கவனமாக தக்கவைத்து பராமரிக்க வேண்டியது எங்கள் தேசிய நலன் ஆகும்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: த ஹிந்த பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியில் உங்களுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாலளரான உங்கள் சகோதரர் கோட்டபாய ராஜபக்ஸவுக்கும் இடையிலான உறவு பிளவுபட்டிருப்பதாகவும் மற்றும் இந்தியப் பிரதமர் மோடியின் ஸ்ரீலங்காவுக்கான விசேட மனிதர் ராம் மாதவ் உங்கள் சகோதரரை  இந்திய நலன்களுக்கு பொருத்தமான ஒரு வித அரசியல் ஏற்பாடுகளில் ஈடுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த செய்தி பற்றிய உங்கள் கருத்தைக் கூற முடியுமா?
மகிந்த ராஜபக்ஸ: நான் அந்த அறிக்கையை பார்க்கவில்லை, அதைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். கடந்தகாலத்திலோ நிகழ்காலத்திலோ எனக்கும் கோட்டபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டதில்லை மற்றும் எதிர்காலத்திலும் நிச்சயம் ஏற்படாது. எங்கள் உறவு அன்பு, பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட நாட்டுப்பற்று என்பனவற்றின் அடிப்படையிலானது ஆனால் போரின்போது பகிர்ந்துகொண்ட ஆபத்தான அனுபவங்கள் என்பனவற்றின் அடிப்படையையும் கொண்டது. ஏன் நேற்றுக்கூட அவர் இங்கு வந்திருந்தார். ஏன் அவர்கள் இப்படியான கதைகளை உருவாக்குகிறார்கள் என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை. அது அந்த பத்திரிகைக்கோ அல்லது அதை ஏழுதுபவருக்கோ கூட நல்லதில்லை.
பத்மா ராவ் சுந்தர்ஜி: பிரதமர் மோடியுடனான உங்கள் தனிப்பட்ட சமன்பாடு என்ன? அவருடைய சொந்த பதவி தொடக்க விழா உட்பட பல தடவை அவரை நீங்கள் சந்தித்துள்ளீர்கள். அதைப்பற்றி சொல்வதற்கு ஏற்ற ஏதாவது விடேச சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதா?
மகிந்த ராஜபக்ஸ: உங்கள் பிரதமர் மோடியை என்னுடைய  ஒரு நண்பனாகவே நான் கருதுகிறேன். அவர் உங்கள் நாடான இந்தியாவுக்கு செய்துள்ளவைகளைக் கண்டு நான் வியப்படைகிறேன். மற்றும் அவரது சர்வதேச கௌரவம். அவர் இந்திய புலம் பெயர்ந்தோரின் ஆதரவை பயன்படுத்திக் கொள்ள மேற்கொண்ட வழிகளை உண்மையில் நான் பாராட்டுகிறேன் என்னால் அந்த வழியில் செல்ல இயலவில்லை! அவரது தேசப்பற்று மற்றும் இந்தியாவை நவீனமயமாக்கும் அவரது இயக்கம் என்பன என்னை வியக்க வைக்கின்றன. ஆம் அவரை நாங்கள் பாராட்டுகிறோம் அதில் கேள்விக்கு இடமில்லை.
பத்மா ராவ் சுந்தர்ஜி: இந்த வருட ஆரம்பத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பலர், மிதவாத தமிழ் தலைவர் எம்.ஏ.சுமந்திரனை கொல்வதற்காக புலம் பெயர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட சதியின் ஒரு பகுதியாக இருந்தற்காகக் கைது செய்யப் பட்டார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு கோபி என்பவர் உட்பட முன்னாள் புலிகள் மூவர், துரத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் மற்றும் வட மாகாணத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த  ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவுக்கு வெளியே மீள் குழுவாக இணைகிறார்கள். இதன் அர்த்தம் உங்கள் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட புனர்வாழ்வுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது என்பதை நிருபிக்கிறதா?
மகிந்த ராஜபக்ஸ: நிச்சயமாக இல்லை. எங்கள் புனர்வாழ்வு முயற்சி வெற்றிகரமானதும் மனிதாபிமானமானதும் கூட.  எங்கள் பாதுகாப்பு படைகள் மற்றும் முன்னாள் மோதல் பகுதிகளில் உள்ள எங்கள் பாதுகாப்பு வலையமைப்பு என்பனவற்றை பலவீனமாக்குவதே பேரழிவை உண்டாக்குகிறது. அவைகளை பலவீனப்படுத்தவது தற்போதைய அரசாங்கம் வேண்டுமென்றே மேற்கொள்ளும் கொள்கை. அந்த பேரழிவு பெருகலாம் என நான் அச்சமடைகிறேன். நாங்கள் அவர்களை விடுவித்தபோது - சுமார் 12,000 பேர்களை - சிலர் முற்றாக புனர்வாழ்வு பெற்றவர்கள், பின்னர் முற்றாக பாடவிதானங்களை கற்றவர்கள். அப்போது அதில் சிலர்  பாதியையே மட்டுமே பூர்த்தி  செய்தவர்கள், இறுதியாக ஒரு சிலர் ஒருவாறு இந்த புனர்வாழ்வு திட்டத்தில் கலந்து கொள்ளாது தப்பியோடியவாகள். புலம்பெயாந்த எல்.ரீ.ரீ.ஈ யினர் பணம் சேகரிக்கிறார்கள், மற்றும் அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். ஆகவே நல்லதொரு பாதுகாப்பு வலையமைப்பு அவசியம். எங்களது புலனாய்வு வலையமைப்பை வலுவுள்ளதாக ஆக்கவேண்டியது கட்டாயம் மாறாக அது பலவீனப்படுத்தப் படுகிறது ஏனென்றால் அவர்கள் புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ யின் பேச்சைக் கேட்கிறார்கள்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: ஆனால் புனர்வாழ்வு திட்டம் வெற்றி பெற்றிருந்தால் அப்போது எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெற்றுள்ளதாக கூறப்படும் இந்தக் கதைகள் யாவும் நிச்சயமாக அரசியல் நோக்கம் கொண்ட வதந்திகளா?
மகிந்த ராஜபக்ஸ: இல்லை அவை வதந்திகள் இல்லை. அவை மிகவும் சிக்கலான பிரச்சினையின் வெறும் ஒரு துளி மட்டுமே.
பத்மா ராவ் சுந்தர்ஜி: ஆகவே பிரச்சினை மிகவும் பெரியது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
மகிந்த ராஜபக்ஸ: ஆம் மிகவும் பெரியது.
பத்மா ராவ் சுந்தர்ஜி:: முன்னாள் புலிகளைச் சோந்த கருணா மட்டக்களப்பில் “தமிழர் சுதந்திரக் கட்சி” என்கிற கட்சியை உருவாக்கியுள்ளார். மற்றொரு முன்னாள் புலி உறுப்பினர் “புனர்வாழ்வுபெற்ற விடுதலைப்புலிகள் கட்சி என்கிற அமைப்பை திருகோணமலையில் உருவாக்கியுள்ளார். “தமிழர் சுதந்திரம்” மற்றும் “விடுதலைப் புலிகள்”  போருக்குப் பின்னான ஐக்கிய ஸ்ரீலங்காவில் தேர்தல் ஆணையகம் நிச்சயமாக  இத்தகைய கட்சிப் பெயர்களை ஏற்றுக்கொள்ள முடியுமா?
மகிந்த ராஜபக்ஸ: நல்லது, கருணாவுக்கு நான் ஆதரவும் ஊக்கமும் வழங்குகிறேன். அவர் பிரதான நீரோட்டத்துக்கு வருவதற்காக தனிப்பட்ட ஆபத்தை எதிர்கொண்டார் மற்றும் அது அவரது சகோதரர் றெஜியின் உயிரைக் காவு கொண்டது - அவர் புலிகளால் கொல்லப்பட்டார். இப்போது கருணா ஒரு அரசியல் கட்சியை உருவாக்குகிறார், அவருக்கு நான் எனது வாழ்த்தை தெரிவிக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட மற்றக் கட்சியைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு அரசியல்கட்சியை ஆரம்பிப்பதற்கான சுதந்திரம் உள்ளது. அமைதியான, ஜனநாயகமான பிரிவினையற்ற அரசியலுக்கு அவர்கள் வருவதை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: ஆனால் நிச்சயமாக நல்ல பெயர்களுடன்?
மகிந்த ராஜபக்ஸ: ஆமாம், நானும் அப்படித்தான் நினைக்கிறேன்….. நான் நினைக்கிறேன் தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கு அறிவுரை வழங்குவார் என்று.
பத்மா ராவ் சுந்தர்ஜி: நீங்கள் பரந்த அளவில் பாராட்டப்படுகிறீர்கள், 30 வருட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டவந்த முதல் ஸ்ரீலங்கா ஜனாதிபதி என உங்கள் எதிரிகளால்கூட பாராட்டப் படுகிறீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இருந்தும் உங்கள் புகழ் ஒரு அசாதாரண தோற்றத்தில் தெரிகிறது. ஒரு புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மாறாக அது ஸ்ரீ.ல.சு.க விட்டு விலகி தனக்கு தலைமை தாங்கும்படி உங்களைக் கேட்கிறது. எந்த வழியானாலும் அடுத்த தேர்தல் மகிந்த ராஜபக்ஸ போட்டிக்கு திரும்புவதைக் காணுமா?
மகிந்த ராஜபக்ஸ: மகிந்த ராஜபக்ஸ ஒருபோதும் போட்டியில் இருந்து விலகியதில்லை. எனது நாடு, எனது தேசம், எனது மக்கள் ஆகியன ஆபத்தில் இருக்கும்போது அவர்களுக்கு நான் தேவை, அதனால் நான் போட்டியில் இருப்பேன்.
பத்மா ராவ் சுந்தர்ஜி: ஆகவே பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ எந்தப் பாத்திரத்திலாவது நீங்கள் திரும்ப வருவீர்கள் இல்லையா?
மகிந்த ராஜபக்ஸ: தேசப்பற்றான அரசியல் ஒரு வேலை அல்ல, அது எனது வாழ்க்கையின் தொழில் முறை என்பதை உங்களிடம் கட்டாயம் நான் சொல்லவேண்டும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-