News Update :

Sunday, April 23, 2017

TamilLetter

பிரான்ஸிய தத்துவமும் மு.கா விமர்சக கூட்டங்களும்..- ஹஸனலி இப்படியா?


"
ஒரு சம்பவத்தின் அல்லது நிகழ்வின் அல்லது கதையின் முடிவுரைதான்; அதன் மொத்தக் கருப்பொருள் அல்லது இலட்சியம் அல்லது முடிவு எனக் கொள்ளப்படுகிறது. இடையில் நடப்பவை அல்லது சித்தரிக்கப்படுபவை; சுவாரசியத்திற்கான அல்லது காட்சிகளை நகர்த்திச் செல்வதற்கான உள்ளீடுகளும் யுக்திகளுமே" - ஸ்டீபன் மைக்கல் (பிரான்ஸ்) சற்று முன்னர் இந்த வாசகங்களை வாசிக்கக் கிடைத்து. இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்து கொண்டு தலைவர் றஊப் ஹக்கீமையும் கட்சியையும் விமர்சிக்கும் கூட்டங்களுக்கும், மேலே குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள வாசகங்களுக்கும் ஒத்த இயல்பு இருப்பதாக உணர முடிந்தது.
ஏன்எனில், தலைமையையும் கட்சியையும் விமர்சிப்பதற்காகப் போடப்படும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆரம்பத்தில் ஒருவர் தொடங்குவார். அவர் தொடங்குகின்ற விடயம் சினிமா பாணியில் சிறகு விரிக்கும். இடையில் வருபவர் இழுத்துச் செல்வார். நடுவில் காசு வாங்கிய கதைகளும்; முடிவு நெருங்கும் போது சில்மிச காட்சிகள் பற்றிய விளக்கங்களும், கேட்போரையும் பார்ப்போரையும் கட்டி வைத்துக்கொள்வதற்கான உள்ளூடுகளாக விறுவிறுப்பாக நகர்ந்து செல்கின்றன.
இந்தக் கூட்டங்களின் இறுதியில் அதாவது கிளைமக்ஸில், முன்னாள் செயலாளர் பேசி முடித்து வைப்பார். அவருக்கு தேசியப்பட்டியல் வழங்காதது பற்றி வருந்தி; சில நேரங்களில் கண்ணீர் விட்டு முடித்து வைப்பார். அதாவது, அதிகாரம் கிடைக்காத ஆதங்கத்தினால்தான் தான் தலைவருக்கும் கட்சிக்கும் எதிராக செயற்படுவதாக கூறுவார். தனக்கு அதிகாரம் தராவிட்டால் கட்சியை அழிப்பேன் என்ற சபதத்தை சரி காணுமாறு முடித்து வைப்பார்.
ஸ்டீபனின் "ஒரு சம்பவத்தின் அல்லது நிகழ்வின் அல்லது கதையின் முடிவுரைதான்; அதன் மொத்தக் கருப்பொருள் அல்லது இலட்சியம் அல்லது முடிவு எனக் கொள்ளப்படுகிறது" என்ற வாசகத்தின் பிரகாரம், இக்கூட்டங்களின் இலட்சியம் - அதிகாரம் அதாவது தேசியப்பட்டியல் வழங்கப்படாமைக்கு - தலைமையையும் கட்சியையும் பலி தீர்ப்பதுதான்
என்பதை ஐயங்களற்றுப் புரிந்து கொள்ளலாம்.

ஸ்டீபனின் "இடையில் நடப்பவை அல்லது சித்தரிக்கப்படுபவை; சுவாரசியத்திற்கான அல்லது காட்சிகளை நகர்த்திச் செல்வதற்கான உள்ளீடுகளும் யுக்திகளுமே" என்ற வாசகத்தின் பிரகாரம், இக்கூட்டங்களில் பேசப்படும் - காசு வாங்கிய கதைகளும்; சில்மிசக் காட்சிகள் பற்றிய விளக்கங்களும் - சுவாரசியத்திற்கான உள்ளூடுகளே. மொத்தத்தில், அதிகாரத்தை அனுபவித்து அதில் மூழ்கிப்போனவர்கள், அதனை இழந்த பின்னர் ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கு மருந்திட; மற்றவர்களை எதிர்பார்த்து ஏமாந்து போய்; நிராசை அடைந்து; கவனிக்கப்படாத கடுப்பில்; அடுத்தவர் பற்றிய அசிங்கங்களை ஆராயும் மனித இயல்பின் பலவீனத்தைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளக் கைக்கொள்ளும் உளவியியல் யுக்தியே இம்மேடைகளும் கூட்டங்களும். ஆனால், அதிகாரத்தின் மீதான இவர்களின் வேட்கை எப்படி மூடி மறைத்தாலும் வெளிப்பட்டே ஆகும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-