News Update :

Wednesday, April 12, 2017

TamilLetter

அதாஉல்லாவின் உண்மை முகத்தை வெளிக்காட்டினார் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்
இறுதியாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா அவர்களின் அமைச்சின் கீழே வருகின்ற சமூர்த்தி அதிகார சபையில் தற்போது நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் பிரகாரம் எஸ்.பி.திஸநாயக்கா அவர்கள் இப்பட்டதாரிகளைச் சந்தித்து நியமனம் தருவதாக வழங்கிய வாக்குறுதியில் அதாவுல்லா உரிமைகோர முனைவது நகைப்புக்குரியது எனத் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் அவர்கள்.
நேற்று (12) அக்கரைப்பற்று பாத்திமிய்யா வித்தியாலய பிரதேச மக்களுடனான சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் கருத்துத் தெரிவித்தார். 

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,   
நாட்டின் பல பாகங்களில் சுமார் ஒரு மாத காலமாக இதுவரை அரச வேலை கிடைக்காத பட்டதாரிகள் உண்ணாவிரதமிருந்து வருவதை நாம் எல்லோரும் அறிவோம். இவர்களுடைய கோரிக்கையின் நியாயங்களை  அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிக்கட்சித் தலைவர்கள், மாகாண சபை முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

இப்பட்டதாரிகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வந்தது. எந்தெந்தத் துறைகளில் இவர்களுக்கான தொழில்களை வழங்கலாம் என்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில், இறுதியாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எஸ்.பி.திஸநாயக்காவின் அமைச்சின் கீழே வருகின்ற சமூர்த்தி அதிகார சபையில் தற்போது வெற்றிடங்கள் நிலவுவதால், அவ்வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு  இப்பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்க முடியுமென பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதனை ஆராய்ந்த அமைச்சரை, இந்நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்காவுக்கு அனுமதியளித்தது. அதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தமது சம்மதத்தையும் தெரிவித்திருந்தனர். இவ்வாறான பின்னணியில், இறக்காமத்திற்கு வருகை தந்த அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த பட்டதாரிகளைச் சந்தித்து அவர்களுக்கு தொழில் வழங்க ஆவண செய்வதாக வாக்குறுதியளித்தார்.

அவருடைய வாக்குறுதி வழங்கப்பட்ட அடுத்த கணமே, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா. தானே இந்நியமனங்களை ஏற்பாடு செய்வதைப் போல காட்டிக்கொள்ள முயற்சி செய்ததைப் போன்று காட்டிக்கொள்ள முயற்சித்தது நகைப்புக்குரியதாகும். போதாக்குறைக்கு அவருடைய அடிவருடிகள் ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் அதனை வைத்து பெரும் பிரச்சாரமும் செய்தனர். எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருக்கின்ற அதாவுல்லாவிற்கு, இறக்காமத்திற்குச் செல்வதற்கோ அல்லது உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளைச் சந்திப்பதற்கோ மனமில்லாமல் இருந்துவிட்டு, யார் பெத்த பிள்ளைக்கோ பேர் வைக்க வருகின்ற விடயத்தை என்னவென்று சொல்வது. இந்த ஏமாற்று வித்தையை ஏதென்று சொல்வது.

மேலும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கும் எஸ்.பி.திஸநாயக்காவைக் கூட்டி வந்து வைத்தியசாலையின் அபிவிருத்தி பற்றிப் பேசினாராம். சமூர்த்தி அமைச்சருக்கும் வைத்தியசாலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கொல்லனுடைய கம்மாலைக்குப் போய் முடி வெட்டச் சொல்வதைப் போலுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசியலால்தான் தனது அதிகாரத்தை இறைவன் பறித்துக்கொண்டான் என்ற விடயத்தை அதாவுல்லா இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

அவர் திருந்த மாட்டார். அவரைத் திருத்தவும் முடியாது. அதிகாரத்தை அதிகம் நேசித்தால், அது இல்லாமல் போகின்ற போது இவ்வாறு மனக்குழப்பம் வரத்தான் செய்யும். அதற்கு மருந்தில்லை. அதற்கு மருந்து ஒன்றே ஒன்றுதான். அது யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்ற பக்குவத்தை வளர்த்துக் கொள்வது மட்டும்தான். அத்தோடு ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு காட்டுவதுதான். ஆகக்குறைந்தது இறைவனைத் தொழுகின்ற பழக்கத்தையாவது இனி அவர் தன்னில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பதவியை இழந்த பின்னராவது அவர் தொழவில்லை என்றால் அவரை எப்படி எடுத்துக்கொள்வது. 


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-