News Update :

Sunday, April 16, 2017

TamilLetter

வரலாற்றின் துயரமான தினம் இன்று


ஒரு மனிதன் இறப்பதற்குள் பத்தாயிரம் மைல் பயணம் செய்திருக்க வேண்டும்’ என்பது புகழ்மிக்க பழமொழி. பல நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கும், புதிய நாகரிகங்கள் தோன்றியதற்கும் பயணங்களே முக்கிய காரணமாக அமைந்தன. ஆனால், வரலாற்றின் திசையை மாற்றிய பல பயணங்களில் இழப்பு என்பதும் தவிர்க்கமுடியாதது.
இன்று வரை உலகில், பயணங்களினால் எத்தனையோ விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், உலகம் காலம் கடந்தும் நினைவுகளில் வைத்துக்கொள்ளும் சில விபத்துகளில் முக்கியமானது ‘டைட்டானிக் கப்பல் விபத்து’. டைட்டானிக் கப்பல் விபத்துக்கும் இன்றைய தினத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? 1912-ம் ஆண்டு இதே தினத்தில் தான் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் இறந்துபோயினர். இதனால், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 நாளை டைட்டானிக் நினைவு தினமாக உலகம் முழுவதும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை தொடர்ந்தது டைட்டானிக். இங்கிலாந்தின் சதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து… ஃபிரான்ஸ், அயர்லாந்து வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை அடைவதுதான் அதன் இலக்கு. பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே அதாவது ஏப்ரல் 14-ம் நாள் நள்ளிரவு சரியாக 11.40 மணியளவில் வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பனிப் பாறையில் மோதியது கப்பல்.
அதனால் ஏற்பட்ட விரிசல் வழியாக கப்பலின் உள்ளே தண்ணீர் புக ஆரம்பித்தது. ஏழரை மில்லயன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு 46,000 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள சொகுசு கப்பல் சுமார் 2,200 க்கும் அதிகமான பயணிகளுடன் கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. உடனடியாக, கடலில் தனக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல்களிடம் உதவி கோரியது. அந்த சமயத்தில் சுமார் 93 கடல்மைல் தொலைவில் இருந்த ஆர்.எம்.எஸ். கார்பெத்தியா உதவிக்கு வருவதாக அறிவித்தது. சரியாக ஏப்ரல் 15-ம் தேதி அதிகாலை 4.10-க்கு அந்த கப்பல் உதவிக்கு வரும்போது டைட்டானிக் கப்பல் 3,700 மீட்டர் ஆழத்தில் மூழ்கிவிட்டது.
டைட்டானிக்
கப்பல் மோதிய பாறை :
சமீபத்தில் லண்டன் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரண்ட் பிக் என்பவர் டைட்டானிக் கப்பல் மோதிய பாறையைப் பற்றி ஆராய்ச்சிகள் பல செய்து சில அறிக்கைகளை வெளியிட்டார். அதில், ‘டைட்டானிக் கப்பல் மோதிய பாறையின் வயது சுமாராக ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலானது. இந்த பாறை தென்மேற்கு கிரின்லாந்தில் இருந்து தொடங்குகிறது.
கப்பல் மோதும் போது பாறை 1.5 எட்வர்ட் ஜான் ஸ்மித்மில்லியன் டன் எடையும், 400 அடி உயரம் கொண்டதாகவும் இருந்தது. ஆனால், இன்று அதன் எடை 75 மில்லியன் டன்கள், 1,500 அடி உயரமாகவும் இருக்கிறது. கப்பல் மூழ்கிய 1912-ம் ஆண்டு இந்தப் பகுதியில் நிறைய பனிப்பாறைகள் இருந்துள்ளன. அதன் காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கின்றன. அப்பனிப் பாறைகள் ஒன்றோடு ஒன்று கலந்துதான் இன்று இந்த அளவுக்குப் பெரியதாக மாறியுள்ளது’ என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கப்பலின் கேப்டன் :
டைட்டானிக் கப்பலின் கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் அனுபவம் மிக்கவராக இருந்தவர். கப்பல் மூழ்கும் போது செய்தி அறையில் மற்ற கப்பல்களிடம் உதவி கேட்பதற்காகவும், கப்பலை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்றும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தார் மேலும், தண்ணீரில் விழுந்த ஒரு குழந்தையைக் காப்பாற்ற கடலில் குதித்தார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது. கூடவே, ‘கப்பல் விபத்துக்குள்ளாக இவரின் அதீத ஆர்வக்கோளாறுதான் காரணம். கடைசி நேரத்தில் மாலுமிகளின் பேச்சை காதில் வாங்கி கொள்ளாததும் முக்கிய காரணம்’ என்று இவர் மீதான எதிர் மறை கருத்துகளும் இருக்கின்றன. ஆனால், இந்த செய்தியை மறுத்து வருகிறது இங்கிலாந்து. கேப்டன் சிறப்பானவர். கடைசி நேரத்தில் கப்பலை மீட்க பெரும்பாடுபட்டார் என சொல்லி கேப்டனுக்கு சிலை வைத்து கௌரவப்படுத்தியுள்ளது இங்கிலாந்து அரசு.
விபத்துக்கான காரணம் :
‘கப்பல் சரியான காலநிலையில் தன் பயணத்தைத் தொடங்கவில்லை என்றும், கேப்டனின் அதீத ஆர்வக் கோளாறின் காரணமாகவே கப்பல் பனிப்பாறையில் மோதியது’ என்றும் பலதரப்பட்ட மக்கள் காரணம் சொல்லி வந்தனர். ஆனால், உண்மையில் விபத்துக்கான காரணம் என்னவென்று இன்றுவரை ஆராய்ச்சிகள் நடைபெற்றுதான் வருகின்றன. செனான் மொலாணி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக டைட்டானிக் கப்பலைப் பற்றி, ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். கப்பல் கட்டுமானப் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள், பயணத்தைத் தொடங்கத் தயாராக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள், விபத்து ஏற்பட்டு கடலுக்குள் மூழ்கியபோது எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தும், பலரைச் சந்தித்தும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார்.
ஆராய்ச்சியின் முடிவில், ‘கப்பல் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு… கப்பலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம்’ என்று குறிப்பிட்டு இருந்தார். டைட்டானிக் கப்பல் குறித்த அறிக்கையில், ‘கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே கப்பலின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்தப் பகுதியானது அதிக வெப்பத்தினால் 75 சதவிகிதத்துக்கும் மேல் பலவீனமாக இருந்துள்ளது.
டைட்டானிக்
விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கிய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில்… கப்பல் இரண்டாக உடைந்த இடத்துக்கு அருகில் மிகப் பெரிய அளவில் கறுப்பு நிற அடையாளங்கள் இருந்துள்ளன. இந்த அடையாளங்கள்… கப்பல் நீரில் மூழ்கும்போது ஏற்பட்ட தீ விபத்தினால் உருவானது கிடையாது. வாணிப நோக்கத்துக்காகச் செய்யப்பட்ட இந்தக் கப்பலில் கறுமை நிற அடையாளம் பதிந்துள்ள அந்த இடத்தில் எரிபொருட்கள் ஏதும் வைக்கப்படவில்லை. அப்படியிருக்க அந்த இடத்தில் இப்படி ஒரு பிளவு ஏற்பட வாய்ப்பே இல்லை.
பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஏற்பட்ட தீ விபத்தால்தான் இந்தப் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்தப் பகுதி இரண்டாக உடைந்து மிகப்பெரிய அழிவினை உண்டாக்கியிருக்கிறது. இதுதவிர, இப்படி ஒரு தீ விபத்து ஏற்பட்டதை அந்தக் கப்பலின் உரிமையாளர் பயணிகளிடத்தில் மறைத்துள்ளார். காரணம், சொன்ன நேரத்தில் அந்தக் கப்பல் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பதாலும், ஒருவேளை… இதுபற்றி பயணிகளுக்குத் தெரியவந்தால், இவ்வளவு பெரிய பொருட்செலவில் உருவான அந்தக் கப்பலில் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்பதாலும், அதனால் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்பதாலுமே அவர், இந்த தீ விபத்தைப் பயணிகளிடமிருந்து மறைத்திருக்க வேண்டும்’ என அதில் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-