முப்பத்து மூன்று பேரின் தலைகளைத் துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதினெட்டு முதல் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சிரியாவின் தேர் இஸ்-ஸார் நகருக்கு அண்மையில் உள்ள அல்-மயாதீன் பாலைவனப் பகுதியில் தோண்டப்பட்ட பாரிய குழியொன்றில் வைத்தே இந்த முப்பத்து மூன்று பேருக்கும் நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழி தற்போது இரத்தத்தால் நிரம்பி வழிவதாகவும் தெரியவருகிறது.
கொல்லப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஸிடம் சிக்கிக்கொண்ட கூட்டுப் படையினரா, சிரியப் படையினரா அல்லது பொதுமக்களா என்பன பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஐ.எஸ். இயக்கத்தால், இந்த வருடத்தின் இதுவரை காலப் பகுதியில் நடத்தப்பட்ட மாபெரும் படுகொலையாக இச்சம்பவம் கருதப்படுகிறது.