News Update :

Tuesday, April 18, 2017

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸ் பலவீனப்படுவதே அந்நியர்களின் இன்றைய தேவை – ஏ.எல்.தவம், மா.ச.உ.



முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை அம்பாறை மாவட்டத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு வகையான சதிகள் அரங்கேற்றப்படுவதுதான் வரலாறு. அதன் தொடர்ச்சிதான் இருக்கும் வரை இருந்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் பற்றியும் தலைமை பற்றியும் விமர்சிக்கும் இன்றைய கூட்டத்தினர் எனத் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம்.
அக்கரைப்பற்று ஆலிம்நகர் மக்களுடனான சந்திப்பு நேற்று மாலை (17) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தவம் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களுடைய பலம் கிழக்கு மாகாணம்தான். இங்குதான் திரட்சிபெற்ற முஸ்லிம்களின் அரசியல் பலம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு நாட்டின் எந்தப் பாகத்தில் என்ன நடந்தாலும் கிழக்கு முஸ்லிம்களிடம் அதன் பிரதிபலிப்பைக் காண முடியும். அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம் அதன் இதயமாகக் கொள்ளப்படுகிறது. இந்த இதயத்தின் இரத்த நாளங்களை துண்டிப்பதனூடாகத்தான் இலங்கை முஸ்லிம்களை பலவீனப்படுத்த முடியும் என்பதை முஸ்லிம்கள் அல்லாத சக்திகள் மிக நன்றாக உணர்ந்து வைத்திருக்கின்றன.

அதற்காக ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு சதிகளை அரங்கேற்றி வந்திருக்கின்றனர். பேரியல் அஷ்ரப் பிளவு; அதாவுல்லா பிளவு; அன்வர் இஸ்மாயில் பிளவு என ஒவ்வொரு கட்டத்திலும் பிளவுகளை ஏற்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்களின் பேராதரவு பெற்ற இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, அம்பாறை மாவட்டத்தை அரசியல் பொம்மைகளின் கைகளில் கொண்டு வருவதன் மூலம் முஸ்லிம்களின் தேசிய ரீதியிலான பலத்தை சுக்குநூறாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் தொடர்ச்சிதான், இருக்கும் வரை இருந்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் பற்றியும் தலைமை பற்றியும் விமர்சிக்கும் ஹசன் அலி தலைமையிலான இன்றைய கூட்டத்தினர். தேசியப்பட்டியல் வழங்கவில்லை என்பதற்காக, தனக்கு மூன்று முறை தேசியப்பட்டியல் வழங்கிய கட்சி என்கின்ற எந்த விசுவாசமும் இல்லாமல், தனக்கு மூன்று முறை தேசியப்பட்டியல் வழங்கிய தலைமை என்கின்ற நன்றி உணர்வில்லாமல் மோசமாக விமர்சிக்கும் இவர்கள், எப்படி சமூகத்திற்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். மகாபாரதத்தின் கௌரவர்களாகவும், ராமாயணத்தின் ராவணனாகவும் மாறியிருக்கும் இவர்களிடம் தர்மத்தின் போதனை இனி எடுபடப்போவதில்லை. 

இன்று பாவங்களைப் பற்றிப் பேசும் இவர்கள், அதே பாவங்களின் பங்காளிகளாக தாங்களும் இருந்தோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி என்றால், பாவத்திற்கான தண்டனை இவர்களுக்கும்தான் உரித்தானது. ஆகவே, மக்கள் மன்றத்தில் எல்லோரும் ஒன்றாகத்தான் கணிக்கப்பட வேண்டும். இவர்கள் மட்டும் எப்படி அவுலியாவாக மாற முடியும். இவர்களுக்கு மட்டும் எப்படி புதிய அவதாரமாக வரிவடிவம் கொடுக்க முடியும். இப்படியான கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் கிடையாது. பதில் கூறுமளவிற்கு அவர்களுக்கு தெளிவுகளும் கிடையாது.

ஏனென்றால், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸிடம் முற்றாக இன்று இருப்பது தமக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்பதால், ஒரு பக்கம் அதாவுல்லாவை தூக்கிப்பிடிக்கின்ற அதேநேரம், மறுபுறம் இவ்வாறாக முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருக்கும் இவர்களை பயன்படுத்தி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் சக்திகளின் வலைக்குள் இவர்கள் வசமாக மாட்டிக்கொண்டு விட்டனர். யாரோ ஆட்டிவைக்க ஆடுகின்ற பொம்மைகளே இவர்கள் எனவும் கூறினார்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-