ஏப்ரல்.13- பறந்து கொண்டிருந்த விமானத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மெக்சிகோவின் சினலோவா என்ற ஊரின் குடியிருப்பு வாசிகள் சிலருக்கு திகிலடிக்கும் விதத்தில் அந்தச் சமபவம் நடந்தது. வானத்திலிருந்து மூன்று பிணங்கள் வந்து கீழே விழுந்தபோது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
பறக்கும் விமானத்திலிருந்து தூக்கியெறியப் பட்டதாக நம்பப்படும் இந்த பிணங்களில் ஒன்று, இங்குள்ள மருத்துவமனை ஒன்றின் மொட்டை மாடியின் மீது விழுந்தது.
இதர இரு பிணங்கள் அருகிலிருந்த வீடுகளின் நுழைவாயில்களில் விழுந்தபோது அங்கே இருந்த பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
விமானத்திலிருந்து அந்தச் சடலங்கள் கீழே வீசப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. எனினும் அவர்கள் சற்று முன்புதான் விமானத்தில் கொல்லப்பட்டு கீழே வீசப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ்காரர்கள், இந்த மூவரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். சினலோவா பகுதி போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.
இவர்கள் போட்டிக் கும்பலால் கொல்லப்பட்டு விமானத்திலிருந்து வீசப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட வேளையில் ஒருவேளை சொந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களாலும் அவர்கள் பலிவாங்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.