ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீமை கட்சித் தலைமையிலிருந்து விலக்குவது ஒரு சிறிய விடயம் அதற்காக வேண்டி அவர் மீது அதாரமற்ற அபாண்டங்களை சுமத்துவது எந்த வகையிலும் ஏற்க முடியாது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.கலீல் தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கிமுக்கு எதிராகவும் கட்சிக்கு எதிராகவும் எதிரணியினரால் பிரச்சாரங்கள் முன்னெடுத்து வருவது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
பெருந் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கட்சியை அழிக்க முற்பட்ட வரலாறுகள் பல உள்ளன.
கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படுகின்றார் என்று முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஸ்தாபக தலைவர் மீது குற்றம் கண்டார். அதே போன்று பிரதியமைச்சர் ஹஸ்புல்லா தலைவருக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி செயற்பட்ட போதும் அவரின் குற்றத்தை மறைப்பதற்காக தலைவர் மீதே பழி போட்டார்.
தலைவர் மறைவுக்கு பிறகு தலைமைத்துவத்தை பொறுப்பெடுத்த தற்போதைய தலைவர் ஹக்கிம் மீது முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஏற்க முடியாத பல குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள் மூலமாகவும் மக்கள் முன்பாகவும் சுமத்தினார்.
இவரின் குற்றச்சாட்டிற்கு வலுச் சேர்க்கும் முகமாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்இஅமிரலிஇநஜீப் ஏ.மஜீத்இபாயீஸ்இ உட்பட பல அரசியல் பிரமுகர்கள் இன்னும் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனியாக அதிகாரங்களை பெற்றனர்.அத்தோடு அதிகாரத்தை இழந்தவர்கள் உண்மை நிலை அறிந்து மீண்டும் மன்னிப்புக் கோரி கட்சிக்குள் இணைந்து கொண்டனர்.
இப்படியான வரலாறுகள் காலத்துக்கு காலம் அரங்கேற்றப்பட்டு வந்த நிலையில் இறுதியாக ஹஸனலி கூட்டு வேறு ஒரு வடிவத்தில் இஸ்லாத்திற்கு முரணான வகையில் மேற் கொண்டு வருகின்றனர்.
ஒரு முஸ்லிமின் மானத்தில் இஸ்லாம் எவ்வளவு கண்டிப்பாக உள்ளதோ அதற்கெதிராக நாகரிகமற்ற முறையில் தலைவர் மீது அபாண்டங்களை சுமத்தி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவதென்பதை சமூகம் ஒரு போதும் அங்கிகரிக்காது.
இக் குற்றச்சாட்டுகள் நமது சமூகத்தை மாற்று சமூகத்தினர் தவறாக புரிந்து கொள்ளும் நிலையை தற்போது எட்டியுள்ளது.இதன் மூலம் பல்லின மக்கள் வாழும் இந் நாட்டில் முஸ்லிகளை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை தோன்றியுள்ளது.
ஜனாநாக ரீதியில் ஒரு தலைவரை இலகுவாக மக்களால் மாற்ற முடியும்.அப்படி மாற்ற வேண்டிய தருணம் இதுவல்ல.
கட்சி எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைவதற்கான காலம் கணிந்து வந்துள்ளது.அந்த இலக்கை முஸ்லிம் சமூகம் எட்டப்படும் சந்தர்ப்பத்தில் அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை ஹஸனலி தரப்பினர் மேற்கொள்வது எமது சமூகத்திற்கு செய்யும் பெரும் துரோகமாகும்.