News Update :

Friday, March 24, 2017

TamilLetter

டக்ளஸ் தேவானந்தாவுக்கு சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசீம் பதில்


மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இவ்வருடத்தில் கிடைக்கப்பெற்ற 2,192 சளி மாதிரிகளைப் பரீட்சித்ததில் 693 பேருக்கு இன்புளூவென்சா A வைரஸ் தொற்றும், 119 பேருக்கு இன்புளூவென்சா B தொற்றும் காணப்படுவது உறுதியாகியிருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்புளூவென்சா நோய் சாதாரண நோய் நிலைமையில் புதிய வைரஸ் ஒன்றின் மூலம் ஏற்படும் ஒன்றல்ல என்றும், இது தொடர்பில் மக்களை வீணாக அச்சமூட்டவேண்டாம் என்றும் பிரதியமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 23/2 நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஈ.பி.டிபி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதியமைச்சர் பைசல் காசிம் இதனைக் கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் 22,562 கண்டறியப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் 1,619 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயினால் மரணம் அடைந்தவர்கள் 16 என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் மரணித்தவர்கள் 46 ஆகும். திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, கிண்ணியா, மூதூர், உப்புவெளி ஆகிய சுகாதார மருத்துவ அதிகார பிரிவுகள் அவதானத்துக்குரிய பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அறிக்கை இடப்பட்ட டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை 1,385 ஆகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணத்தினால் இந்நோய் பரவியது பொதுவான ஒரு காரணமாக உள்ளது.
உரிய மாவட்டத்தில் நோய் அவதானிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல், பதிவு செய்யப்பட்ட நோயாளர்களிடம் உடனடியாக விசாரித்து உரிய பிரதேசத்தில் நுளம்பு பெருகும் இடங்களை ஒழித்தல், தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் 150 குழுக்களை இட்டு இம்மாதம் 22ஆம் திகதியிலிருந்து 28ம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார்.
கிண்ணியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவை அமைத்தல், 17 தீவிர சிகிச்சை பிரிவு கட்டில்கள், அவற்றுக்கு தேவையான உபகரணங்களும் திருகோணமலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவிருப்பதாகவும், பிற வைத்தியசாலைகளிலிருந்து மற்றும் பொது விஷேட மருத்துவ குழுக்கள் மற்றும் தாதியர் குழுக்களை அனுப்பப்படவிருப்பதாகவும் கூறினார்.
அதேநேரம், கடந்த இருமாதங்களுக்குள் நாட்டின் பல பிரதேசங்களில் இன்புளூவன்சா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது. பொதுவாக வருடத்தின் நவம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் அதிகமான இன்புளூவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அறிக்கையிடப்படுவதுடன் இவ்வருடத்தில் அது ஏனைய வருடங்களை விடவும் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இன்புளூவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளானதன் காரணத்தால் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களில் 8 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இம் மரணங்களில் அதிகமானோர் வேறு நீண்டகால நோய் நிலமைகள் என்பதுடன் அதில் இருவர் கர்ப்பிணித்தாய்மார்கள் ஆகும். வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடும் போது மார்ச் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைவு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் சகல பிரதேங்களிலும் அறிக்கை இடப்பட்டுள்ளது.
இந்த இன்புளூவன்சா வைரஸ் மூலம் ஏற்படுத்தக்கூடிய பொதுவான தடிமன், காய்ச்சல் அல்லாத Flu1 நோய் நிலமையில் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளை காட்டுவதுடன் பொதுவாக சிகிச்சைகள் வழங்கப்படாமலே குணமடைகின்றது. ஆனாலும் சிலருக்கு விஷேடமாக 65வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டுவயதுக்கு குறைந்த குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்கள் மற்றும் நீண்டகால இருதய நுரையீரல், சிறுநீரகம், நீரழிவு நீர் போன்ற நோய்களினால் பாதிப்புற்றோர்களுக்கு இன்புளூவன்சா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும்.
இவ்வாறான நோயாளர்கள் கூடிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் நோய் அறிகுறிகளில் ஏதாவது வித்தியாசம் அல்லது மூச்சு விடுவதற்கு கஷ்டப்படின் அவர்களை உடனடியாக வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தேவையான உபகரணங்கள் மற்றும் அவசியமான அறிவூட்டல்கள் வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-