News Update :

Monday, March 6, 2017

TamilLetter

தவத்தை மௌனிக்கச் செய்ய ஹசன் அலி குழுவினர் தீவிரம்.............




கடந்த வெள்ளிக்கிழமை (03.03.2017) நிந்தவூரில் ஹசன் அலி குழுவினர், தலைவர் றஊப் ஹக்கீம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கட்சியை தூய்மைப்படுத்தப் போவதாக பொதுக்கூட்டமொன்றை நடாத்தியிருந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் கொடிகள் மற்றும் கட்சி கீதம் என்பன பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் அதற்கடுத்த தினம் (சனிக்கிழமை) கண்டியில் நடந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானத்தின் பிரகாரம் திட்டமிடப்பட்டிருந்த பிரதேச முக்கியஸ்தர்கள் சந்திப்பு நிகழ்வும் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் ஹசன் அலியின் சகோதரர் ஜப்பார் அலி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம், பிரதியமைச்சர்களான பைசல் காசிம், ஹரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன் மற்றும் தவம் போன்றோர் கலந்து கொண்டு, கட்சியின் மீதும் தலைவரின் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்ததோடு, இவ்வாறான கட்சிக்கு எதிரான விடயங்களை யார் யார் பின்னிருந்து நடாத்துகின்றனர் என்ற விடயங்களையும் தெளிவுபடுத்தினர்.

எல்லோரும் உரை நிகழ்த்திய போதிலும் மாகாண சபை உறுப்பினர் தவத்தினால் வழங்கப்பட்ட தெளிவுகள் ஹசன் அலி குழுவினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. மற்றவர்கள் மேலெழுந்த வாரியாக விளக்கங்களை வழங்கிய போதிலும், தவம் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தனித்தனியாக எடுத்து கூறிய விளக்கங்களும் அவருடைய பாணியும் மக்கள் மத்தியில் அதிகம் தாக்கம் செலுத்துவதாக அமைவதால், ஹசன் அலி குழுவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், தவத்தை மௌனியாக்குவதற்கு பல்வேறு வகையான வழிகளைப் பற்றி ஹசன் அலி குழுவினர் திட்டமிட்டு வருவதாக அறிய முடிகிறது. தவத்திற்கு நெருக்கமான நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று நண்பர்கள், ஊடக நண்பர்கள் என பல தரப்பினர்களிடம் தவத்தோடு பேசுமாறு தூது அனுப்பப்படுகிறது. இதற்கு மேலதிகமாக பேரம் பேசுதல் மற்றும் தவத்தின் மீது அபாண்டங்களைக் கட்டவிழ்த்து விடுவது தொடர்பிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


ஆனால், தவம் இவ்வாறான விடயங்களுக்கு வளைந்து கொடுக்கக் கூடியவரல்ல என்பதுதான் இதிலுள்ள சுவாரசியமான விடயம். சமூகம்,கட்சி, தலைமை போன்ற விடயங்களில் எந்த விட்டுக்கொடுப்புக்களுக்கும் அவர் இடமளிக்க மாட்டார். தற்போது கட்சியும் தலைமையும் முகங்கொடுத்திருக்கும் சவால்களில் தான் தலைமையோடு உறுதியாக இருக்கப்போவதாக ஏலவே தனது முகநூலில் அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-