பெரும்பாலும் விடுமுறை தேவைப்படுகிறது என்றால் மாணவர்களோ, ஊழியர்களோ முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் உடல் நலம் சரியில்லை என்ற காரணம் தான். அதுவும் மாணவர்களிடையே இந்த காரணம் மிகவும் பிரபலம். ஆனால் தமிழகம், தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவன் விடுப்பு எடுப்பதற்கான உண்மைக் காரணத்தைக் கூறி எழுதிய கடிதம், ஆசிரியரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளதோடு, முகநூலிலும் வேகமாகப் பரவி வருகிறது.
அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் ஈஸ்வரன் என்ற மாணவன், விடுப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் "என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. எனவே கால்நடைகளை பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ' என மாணவர் ஈஸ்வரன் எழுதிய கடிதம் வகுப்பாசிரியரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இக்கடிதத்தின் மூலம் மாணவனின் நேர்மையும், கால்நடைகள் மீது வைத்திருக்கும் பாசத்தையும் அறிய முடிகிறது எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "மாணவன் ஈஸ்வரனின் விடுப்பு கடிதம் படித்து நெகிழ்ச்சியடைந்தேன். மறுநாள் பள்ளிக்கு வந்த அவனிடம் கடிதம் குறித்து கேட்டேன்.
அதற்கு அவன் ' சார், நீங்கதானே உண்மை எதுவாக இருந்தாலும் அதைப் பேசுங்கனு சொல்லிக் கொண்டே இருப்பீர்கள் என்று என்னிடம் கூறினான். அப்போது தான் நாம் சொல்லும் சில வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமாக பதிகிறது என்பதை நான் உணர்ந்தேன்" என்றார் அவர்.
அக்கடிதத்தை ஆசிரியர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போக, மாணவர் ஈஸ்வரனின் கடிதம் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.