பத்துக் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் மனு அனுப்பியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வேல்முருகன், லைக்கா நிறுவனத்திற்கும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக லைக்கா நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் அருணாச்சலம் மனு அனுப்பியுள்ளார். லைக்கா நிறுவனத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் தொடர்பு எதுவும் இல்லை. இதேவேளை, இலங்கை அரசாங்கத்துடனும் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆனால் தமிழக கட்சிகள் தவறான தகவலை வெளியிட்டு தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எமது நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். எனவே 10 கோடி ரூபாய் நஷ்ஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர, தனது கருத்திற்காக வேல்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். எனினும் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மன்னிப்பு கோரும் பேச்சுக்கே இடம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.