News Update :

Thursday, February 9, 2017

TamilLetter

சட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புரியுமா?-மு.கா. வின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொடுப்புகளையும் கழுத்தறுப்புகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் இவ் வேளையில் இக் கட்சியின் கடந்து வந்த கஷ்டமான கால பகுதியில் காங்கிரஸ் சந்தித்த சவால்கள் பற்றியும் அக் கட்சி முகங்கொடுத்த பிரச்சனைகள் பற்றியும் இன்றைய இச் சந்தர்ப்பத்தில் இதன் பழைய வரலாறுகள் தொடர்பாக ஒரு சில விடயங்களை மிகச் சுருக்கமாக இங்கு தொட்டுக் காட்டுவது பொருத்தம் என கருதுகிறேன்.

 இக்கட்சியின் ஆரம்ப பொதுச் செயலாளராக இருந்து அதனை தோற்றுவித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்து  கடந்த 29 ஆண்டுகளை கடந்து இன்று காலெடுத்து வைக்கும் இச் சந்தர்ப்பத்தில் இவை பற்றிய சில தகவல்களை மீண்டும் மீட்டுக்கொள்ளலாமென விரும்புகிறேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதிதான் இது தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதியப்பட்டது. அது கடந்து வந்த கஷ்டமான காலங்கள் சந்தித்த சதிகள் ஏராளம் அந்த வரிசையில் இப்பொழுதும் இது பல குத்துவெட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு காட்டிக்கொடுப்புகளுக்கு மத்தியில் தலமைத்துவத்திற்கு எதிராக செயல்ப்படுவதும் மிகவும் மனவருத்தத்திற்குரியதே. இது போன்ற எண்ணற்ற சவால்களை மறைந்த தலைவரின் காலத்திலும் கூட நடத்தேறியுள்ளதென்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி மீண்டும் கொழும்பு பாஷா வில்லாவில் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகதி அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பின்புதான் இக்கட்சியை நாங்கள் வடகிழக்குக்கு அப்பால் உள்ள எல்லா கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற போது இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா என்று எல்லோரும் எங்களை பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அதனால் இதனை பதியப்பட வேண்டிய அவசியமும் அவசரமும் அன்று உடனடியாக உணரப்பட்டது.

1983ம் ஆண்டு  ஜூலை கலவரத்தின் பின் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் கூட முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேச எங்களுக்கென்று ஒரு தனியான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லாத காரணத்தினால் பேரினவாத கட்சிகளின் ஒட்டிக்கொண்டிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தயவில்தான் நாங்கள் தங்கியிருந்தோம்.  இந்த துர்ப்பாக்கிய நிலமையை போக்குவதற்கு இக்கட்சியின் அவசியம் அன்று ஏற்பட்டது.

இதன் பின்பு வடகிழக்கில் அப்போது பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேச சபை தேர்தலுக்கு நாம் சுயேட்சையாக 'தராசு' சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தோம். இத் தீர்மானம் அட்டாளச்சேனையில் நடந்த செயற்குழு கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்பட்டது அக்கூட்டத்தை இக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நான் ஒழுங்குபடுத்தி நடத்தி வைத்தேன். அதுதான் இக்கட்சியின் ஆரம்ப அரசியல் அறிமுகமாக அமைந்திருந்தது.

இதன் பின்பு கொழும்பில் நடந்த மகாநாட்டில் இக்கட்சியின் ஸ்தாபக தலைவராக மறைந்த எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களும் அதன் ஸ்தாபக பொதுச் செயலாளராக எஸ்.எம்.ஏ. கபூர் ஆகிய நானும் பொருளாராக ஓட்டமாவடியைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல் காதர் அவர்களும் அங்கு கூடியிருந்த ஆயிரக்காணக்காணோர் மத்தியில் வைத்து 'அல்லாஹூ அப்பர்' என்று 'தக்பீர்' என்ற முழக்கத்துடன் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டோம்.

இதன் பின்புதான் தேர்தல் ஆணையாளரினால் இக்கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதியப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த மகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வடகிழக்கிலும் ஏனைய இதர மாவட்டங்களிலும் ஏறக்குறைய 29 பிரதிநிதிகளை இக்கட்சி முதன்முதலில் பெற்று மாபெரும் அரசியல் புரட்சியொன்றை இந் நாட்டு அரசியல் வரலாற்றில் நிலைநாட்டியது.

முஸ்லிம் சமூகத்திற்கு முதன் முதலாக முகவரியை கொடுத்தது முஸ்லிம் காங்கிரஸ்தான் அதற்கான முகவரியை பெற்றுத் தந்தவர்தான் மறைந்த தலைவர் அஸ்ரப். அன்னாருக்கான அந்த அரசியல் முகவரியை பெற்றுக் கொடுத்தவர்கள்தான் எங்களைப் போன்ற ஒருசிலர் என்று கூறினால் அது மிகையாகாது. மற்றவர்களொல்லாம் அன்று வெறும் பார்வையாளர்களாக பகிடி பண்ணி பார்த்துக்கொண்டிருந்தவர்களே.

இக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலம் முதல் இதன் பெயரைப் பார்த்த பலர் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள் காரசாரமாக விமர்சித்தார்கள் இனத்துவேசத்தை கக்கினார்கள் கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதித்தார்கள் கட்சி உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இப்படித்தான் இக்கட்சியின் ஆரம்ப வரலாறு இரத்தக் கறைகளுடன் தோற்றுவிக்கப்பட்டது என்பதை இன்றுள்ளவர்கள் அறிந்திருப்பார்களா?

சுருக்கமாகச் சொன்னால் மறைந்த அமைச்சர் மலையகத்தின் தலைவர் எஸ். தொண்டமான் கல்முனையில் கூறியதைப் போன்று கடந்த  50 ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சியும் அடையாத அரசியல் அங்கீகாரத்தை இந்த குறுகிய காலத்தில் முஸ்லிம் காங்கிறஸ் அடைந்துள்ளது.

கிழக்கில் உதித்த இந்த உதய சூரியனின் ஒளிக்கீற்றுக்கள் இந் நாட்டின் நாலாபகுதிகளிலும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றது. கட்சிக்கு கிடைத்த மரச் சின்னத்தின் ஆணிவேர் கிழக்கிலிருந்த போதிலும் இதன் பக்க வேர்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஆலமரம்போல் பெரும் விருட்சமாக வேரூன்றி இன்று பலருக்கு பல்வேறு மட்டங்களில் பல ரகத்தில் நிழல் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.

இதே நேரத்தில்; இரு பேரினவாதக் கட்சிகள் இணைந்து ஏற்படத்திய தேசிய அரசு என்ற பெயரில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது இது ஏனைய சிறுபான்மை கட்சிகளுக்கு குந்தகமாகவே பல விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படுமோ? என்ற அச்சம் எங்களில் ஏராளாமான பேருக்கு இருக்கின்றது. இவைகள் பற்றி நிறைய சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இன்று ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து எடுக்க வேண்டியுள்ளது.

இனப் பிரச்சனை தீர்வில் முஸ்லிம்களின் அரசியல் அதிகார விடயங்கள் சம்பந்தமாக எமது கட்சி ஏனைய தலைவர்களுடன் ஒன்று சேர்ந்து பொருத்தமான முடிவினை எடுப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக எமது கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்;ஹீம் அவர்கள் முழு மூச்சாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவரை எமது கட்சியின் போராளிகளும் ஏனையோர்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் எவ்வித கருத்து வேறுபாடுகளின்றி அவரின் கரத்தை பலப்படுத்த வேண்டியது எங்களின் பொறுப்பும் தார்மீக கடமையுமாகுமென இத்தருணத்தில்  இக்கட்சியின் 29வது வருட நினைவு தின நாளில்  வேண்டிக்கொள்கின்றேன். (11.02.2017 - 11.02.1988 ஸ்ரீ 29)

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-