News Update :

Thursday, February 2, 2017

TamilLetter

விக்னேஸ்வரனை வடக்கு மக்கள் அடித்துத் துரத்த வேண்டுமாம்! - தயாசிறி ஜயசேகர



சிங்கள தமிழ் மக்களிடையே இனவாதத்தை விதைத்து வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்ற நபர்களை  வடக்கு மக்களே அடித்துத்துரத்திவிட வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்ற நிலையில் வடக்கு முதலமைச்சர் பைத்தியம் பிடித்திருப்பது போல பேச்சுக்களை வெளியிடுவதால் அதிகாரப் பரவல் குறித்து ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கும் நிலையே அரசாங்கத்திற்கு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் பிரதியமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

புதிய அரசியலமைப்பு மற்றும் போர்க்குற்றம் தொடர்பான வெளிநாட்டுத் தலையீடு இன்றிய உள்ளக விசாரணை போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்கமாக விமரசனம் செய்து வருகின்றார். எனவே தமிழ் மக்களினால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவரது கூற்று இவ்வாறு இருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் எதிர்கால முயற்சி தொடர்பாக ஊடகவியலாளர்கள் இதன்போது வினா எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர “இவ்வாறான கருத்துக்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்களே வெளியிடுவார்கள் என்பது எமக்குத் தெரிந்த விடயம். இவை தொடர்ந்தும் இடம்பெற்றால் புதிய அரசியலமைப்பிற்கு கை உயர்த்துவதா இல்லையா என்பது குறித்து தனிப்பட்ட ரீதியில் முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம். சாதாரண தமிழ் மக்களின் எண்ணத்தையல்ல இவர்கள் கூறுவது. ஐக்கிய இலங்கைக்குள் சமாதான ரீதியில் அதிகாரப் பரவல், அந்தந்த நாட்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு, பொருளாதார தீர்வு என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

சமஸ்டி தீர்வு தேவையில்லை, மாறான ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வே வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பலர் ஒருமித்து கூறுகின்றனர். உள்ளகப் பொறிமுறை குறித்து அவர்களுக்குப் பிரச்சினை இருக்கலாம். ஆனால் நாட்டின் இறையான்மையையும், ஐக்கியத்தையும் காட்டிக்கொடுக்க நாம் தயாரில்லை. நாட்டில் எமக்குத் தேவையான நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து நீதிபதிகளை அழைக்க முடியாது. பைத்தியக்காரத்தனமாக முதலமைச்சர் கூறுகின்ற கூற்றுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை எமக்கில்லை.

இவ்வாறான கூற்றுக்களை அவர் வெளியிடுவதனால் சமாதான முறையில் தமிழ் மக்களுடன் நாங்கள் செய்துகொள்ள விரும்பும் அரசியல் கொடுக்கல் வாங்கலுக்கு சவால் ஏற்படுகிறது. இதனால் சிங்கள தமிழ் இனவாதிகளுக்கு சக்தி அதிகரிக்கும். விக்னேஸ்வரன் இனவாதத்தையே ஊக்குவிக்கின்றார். எனவே நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் இவ்வாறான நாய்களை கட்டிப்போட வேண்டும் என்பதே. விக்னேஸ்வரன் போன்றவர்கள் இவ்வாறு கூறுகையில் ஜனாதிபதி முறைமை பற்றி சிந்திப்பதற்கு நாங்கள் தள்ளப்படுகின்றோம்.
ஜனாதிபதி முறையை முற்றாக நீக்கப்பட இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். ஆனால் வடக்கில் முதலமைச்சர் கத்துவது பற்றி எனக்கு முழுமையாக கூறமுடியாது. எனினும் கூறுவது அனைத்தும் தவறானதாகும். இதனூடாக தமிழ் - சிங்கள ஐக்கியமே வீழ்ந்துவிடுகிறது. இந்த நிலையில் நாங்கள் அதிகாரத்தைப் பகிர முற்படுகையில் வடமாகாண முதலமைச்சரின் கூற்றுக்களை உதாரணப்படுத்தும் சர்வதேசம் இதனை எவ்வாறு செய்ய முடியும் என்று வினா எழுப்பும். அனைத்திற்கும் முன்னதாக வடக்கிலுள்ள மக்கள் விக்னேஸ்வரனை அடிக்க வேண்டும். ஐக்கியத்தை சீர்குலைக்கும் பூதமாக விக்னேஸ்வரன் உருவெடுத்துள்ளார்” என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-