தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மணிநேரங்களில் வவுனியா பிராத்திய ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க தடை விதித்த அரச அதிபர்
தகவல் அறியும் சட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டு வந்த சில மணித்தியாலங்களே கடந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் செய்தி சேகரிக்க வவுனியா பிராந்திய ஊடகவியலாளருக்கு வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார அவர்கள் தடை விதித்த சம்பவம் நேற்று (04.02) இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இ.போ.சபையினர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், வவுனியா வர்த்தக சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இ.போ.சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் மற்றும் வவுனியா புதிய பேரூந்து நிலைய பிரச்சனை தொடர்பில் இதில் ஆராயப்பட்டன. இதன்போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்னதாக செய்தி சேகரிக்க அனுமதித்த வவுனியா அரச அதிபர் கூட்டம் ஆரம்பமாகியதும் வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களை வெளியேற்றியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் சென்ற அவர்களது பிரத்தியேக ஊடகவியலாளர்கள தொடர்ந்தும் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார். இதேபோல் அக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் அங்கு நடந்தவற்றை வீடியோ மூலமும், புகைப்படங்களாகவும் பதிவு செய்து வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் பிராந்திய ஊடகவியலாளர்களை மட்டும் வெளியேற்றியமை எவ்வகையில் நியாயமானது என ஊடகவியலாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மணித்தியாலங்களில் இடம்பெற்ற பிராந்திய ஊடகவியலாளருக்கு எதிரான ஊடக அடக்குமுறைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.