News Update :

Saturday, February 4, 2017

TamilLetter

மகள் திருமணத்திற்கு செல்ல நளினி மனு




வேலூர் மத்திய சிறையில் நளினி-முருகனை சட்டத்தரணி புகழேந்தி இன்று சந்தித்து பேசியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதே வழக்கில் குற்றவாளியான முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுவிக்கக் கோரி நளினி-முருகன் உள்பட மற்ற குற்றவாளிகள் தரப்பும் போராடி வருகிறார்கள்.

விடுதலை வழக்கு விபரம் குறித்து, நளினி-முருகனை அவர்களது வக்கீல் புகழேந்தி அடிக்கடி சந்தித்து விவரித்து வருகிறார்.

இதற்கிடையே, ‘‘ராஜீவ் கொலையும் மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா- நளினி சந்திப்பும்’’ என்ற பெயரில் நளினி பல்வேறு சம்பவங்களை தொகுத்து எழுதிய சுயசரிதை புத்தகம் தமிழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

நளினி எழுதிய சுயசரிதை புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு டெல்லி, சென்னை, லண்டன் ஆகிய நகரங்களில் ஒரே திகதியில் வெளியிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நளினி மற்றும் முருகனை சந்திக்க அவர்களது சட்டத்தரணி புகழேந்தி வேலூர் ஜெயிலுக்கு இன்று சென்றிருந்தார்.

வேலூர் ஆண்கள் சிறைச்சாலையில் முருகனை முதலில் சந்தித்து பேசிய அவர், பின்னர் பெண்களுக்கான சிறைச்சாலைக்கு சட்டத்தரணி புகழேந்தி சென்றார்.

அங்கு நளினியுடனான சந்திப்பு நீண்ட நேரமாக நடைபெற்றது.

பின்னர், சிறைச்சாலைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு வக்கீல் புகழேந்தி பேட்டி அளித்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெறும் நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழக அரசு 2014-ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தது.

இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கின் இறுதி கட்ட விசாரணை வரும் 7-ந் திகதி நடைபெற உள்ளது.

இது சம்பந்தமாக நளினி - முருகனை சந்தித்து விவாதித்தேன்.

மேலும் நளினி மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கு 6 மாதம் விடுப்பு கேட்டு, சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி வாயிலாக சிறைத்துறை தலைவருக்கு நளினி பரோல் மனு அனுப்பி உள்ளார் என அவர் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-