News Update :

Thursday, February 23, 2017

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸ் குருட்டமைப்பும், புதிய பானையில் புளித்த கள்ளும்


ஏ.எல். நசார் - பிரசார செயலாளர்
முஸ்லிம் தேசிய முன்னணி

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த வெற்றி பெறுவதற்கு மேலதிக சிங்கள வாக்குகள்  அவசியப்பட்டன. அதைப்பெறுவதற்கு இருந்த ஒரே சுருக்கமான வழி இனக்கலவரத்தைத் தூண்டிவிடுவதுதான். அதன் பிரதிபலிப்பாக அளுத்கம முஸ்லிம்கள் மீது சிங்கள இன வெறியர்கள் அடர்ந்தேறி முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள், மத்ரசாக்கள், வியாபாரஸ்தலங்கள் மட்டுமல்லாது முஸ்லிம் உயிர்களையும் பலிகொண்டனர். இதன் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தனர். முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் புறக்கணித்து தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா ஜனாதிபதித் தேர்தலின்போது மகிந்தவுக்கு ஆதரவு தேடினார்.

அதே நேரம் நல்லாட்சி வேட்பாளரான மைத்திரிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளிக்க தீர்மானித்தது. இந்த தீர்மானத்திற்கு மாற்றமாக முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவுத் தான் நடு நிலையாக இருக்கப்போவதாக பத்திரிகைக்கு அறிக்கை விட்டார். தான் யாரையும் ஆதரிக்க போவதுமில்லை எதிர்க்கப் போவதுமில்லை என்று எந்த முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடையிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்த மகிந்தவின் ஆதரவாளர்களான அதாஉல்லாவும் பசீர் சேகுதாவுத்தும் இப்போது மகிந்தவுக்காக முஸ்லிம்களின் வாக்குகளை திரட்டும் முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பிப்பதாக தெரிகிறது. இந்த நாட்டு முஸ்லிம்கள், அவர்கள் வடகிழக்கை சேர்ந்தவர்கள் என்றாலும் அல்லது தென்மேற்கைச் சேர்நதவர்கள் என்றாலும் இந்த சமூகத் துரோக நடவடிக்கை பற்றி மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்போடு எதுவித தொடர்பும் வைக்காமல் விலகி இருக்க வேண்டும் என்று முஸ்லிம் தேசிய முன்னனி பிரசார செயலாளர் ஏ.எல். நசார் தெரிவித்துள்ளார்.

23.02.2017 தமிழ் தினசரியிலும், முக நூல்களிலும வெளியாகியுள்ள இந்த முஸ்லிம் காங்கிரஸ் கூட்டடைப்புக்கான பத்திரிகைச் செய்தியில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பாக முஸ்லிம்களை, குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களை அறிவுறுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என நான் நினைக்கின்றேன்.

முஸ்லிம்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான கருவியாக செயற்படுவதுதான் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆரம்பித்திலிருந்த கொள்கை, கோட்பாடு, இலட்சியம் மற்றும் இலக்குகளில் பிரதானமானது என்றும், மு.காவின் 2015ஆம் ஆண்டினுடைய யாப்புத் திருத்தத்துடன் கிழக்கு மாகாணத்திற்கென்று இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன என்றும் தவிசாளர் பதவி பறிக்கப்பட்டுள்ள பசீர் சேகுதாவுத் குற்றம் சுமத்தி, அதனால் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரசுக்கு ஆரம்பத்திலிருந்த கொள்கை, கோட்பாடு, இலட்சியம் மற்றும் இலக்குகள் பற்றி கூறியுள்ள பசீர் சேகுதாவுத் அவைகளில் ஒவ்வொன்றைப் பற்றியும் குறைந்த பட்சம் ஒவ்வொரு உதாரணத்தையாவது சொல்லாமல் விட்டது இட நெருக்கடி காரணமாகவா? முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக கருவியாக செயற்படுவதுதான் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆரம்பத்திலிருந்த கொள்கை, கோட்பாடு, இலட்சியம் மற்றும் இலக்கு என்றால் முஸ்லிம்களின் அபிலாiஷகளில் மிக முக்கியமானதையாவது அவர் சுட்டிக் காட்டாமல் போனது ஏன்? அதுவும் இடநெருக்கடி காரணமாகத்தானா?

2015ம் ஆண்டினுடைய மு.காவின் யாப்புத் திருத்தத்துடன் கிழக்கு மாகாணத்திற்கென்று இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன என்றும் கூறும் பசீர் மு.காவின் 2015ம் ஆண்டிற்கு முன் கிழக்கு மாகாணத்திற்கென்று விசேடமாக, பிரத்தியேகமான உரிமைகள் யாப்பில் ஒதுக்கப்பட்டிருந்தனவா என்பதையும் அவை யாவை என்பதையும் சொல்வாரா? குறைந்த பட்சம் ஒன்றிரண்டையாவது சொல்வாரா? அவ்வாறு வடமாகாணம், மேல் மாகாணம் என்று உள்ள ஏனைய எட்டு மாகாணங்களுக்குமென்றும் பிரத்தியேகமான தனித்த உரிமைகள் 2015க்கு முன்னர் உள்ள யாப்பில் குறிப்பிடப்பட்டிருந்தனவா? அவற்றில் ஒவ்வொரு மாகாணத்திற்குமுரிய ஒவ்வொரு உதாரணத்தையாவது பசீர் வெளிப்படுத்துவாரா?

முஸ்லிம் காங்கிரஸ் வெறுமனே வெற்று அரசியல் நடாத்தும் ஒரு அமைப்பாக மாறி இருக்கிறது என்று பசீர் கூறியிருக்கிறார். இந்த மாற்றம் 2015க்குப் பின்னர் தானா? அல்லது அதற்கு முன்னரும் இருந்ததா? எவ்வளவு காலமாக? அந்தக் காலத்தில் தவிசாளர் பதவியிலிருந்த பசீர் என்ன செய்து கொண்டிருந்தார்? சீ.டீ. சேகரித்துக் கொண்டிருந்தாரா? ரஊப் ஹக்கிம் என்ற இன்றைய தலைமையில் இருக்கின்ற இந்த கட்சியானது முஸ்லிம் காங்கிரஸ் என்றதொரு பெயர்ப் பலகையை மாத்திரம்தான் சுமந்த ஒரு கட்சியாகும் என்று பழித்துக் கூறும் பசீர் அவரது கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ள தேசிய காங்கிரசுக்கு பெயர்ப்பலகையும் கூட இல்லாமல் போயிருப்பதையும், மற்றுமுள்ள மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாமலும் போய்விடலாம் என்பதைப் பற்றியும் பசீர் பழித்துச் சொல்லமாட்டாரா?

முஸ்லிம் காங்கிரசின் கொள்கைள், இலட்சியங்கள் கூட இல்லாதொழிக்கப்பட்டுள்ளன என்றும் பசீர் கூறியிருக்கிறார். அவர் தவிசாளராக இருந்தபோது இருந்த எந்தெந்த கொள்கைகளும் எந்தெந்த இலட்சியங்களும் இப்போது இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளன என்று அவரால் பட்டியல் போட்டு தெரியப்படுத்த முடியுமா?

ஹக்கீமுடைய அரசியல் நிலைப்பாடு கிழக்குக்கு உதவாது என்ற நிலைப்பாட்டில்தான் முஸ்லிம்கள் இருக்கின்றனர். என்பது பசீருக்கு அண்மைக் காலத்தில் தான் புரியத்தொடங்கி விட்டதாக அவர் சொல்லுகிறார்.

கிழக்குக்கு உதவாது விட்டாலும் ஏனைய 8 மாகாணங்களுக்கும் உதவும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தானே? அப்படியானால் வடக்குக்கு உதவக்கூடியதாக ஹக்கீமின் நிலைப்பாடு இருக்குமானால் ரிசாட்டின் மக்கள் காங்கிரஸ் எப்படி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்போடு சேர முடியும்? பசீர் சொல்லுவாரா?

முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை கையுதிர்த்து விட்டுத்தான் அதாஉல்லா தனது கட்சிக்கு தேசிய காங்கிரஸ் என்றும், ரிசாட் தனது கட்சிக்கு மக்கள் காங்கிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளபோது தனது பக்கத்து நியாங்களை தனது சொந்த ஊரான ஏறாவுருக்கே சென்று பகிரங்க கூட்டம் வைத்து சொல்ல முடியாத பசீர், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை ஏமாற்றுவதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு என்ற பெயரை தெரிந்தெடுத்திருக்கிறார் என்பது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு விளங்கமாட்டாதா?
மரணம் தான் மகிந்தவை தன்னிடம் இருந்த பிரிக்கும் என்று மார்தட்டி ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவின் வெற்றிக்காக உழைத்துக் கொழுத்து பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் அவரின் கூட்டுக்கு வலைவீசிய அதாஉல்லாவும், மகிந்தவுக்கோ அல்லது வேறு யாருக்குமோ ஆதராவாகவோ அல்லது எதிராகவோ பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று சூளுரைத்து அறிக்கை விட்ட பசீர் சேகுதாவுத்துக்கும் இன்றைக்குத் தேவைப்படுவது மகிந்த தான்.
அதற்காக முஸ்லிம் காங்கிரசில் காணக்கூடிய சிறு பெரும் தவறுகளை சீர்திருத்த முயற்சிக்காமல் இரண்டு துண்டாக ஒடித்து பிளவுபடுத்த முயற்சிக்கும் பசீரும், அதாஉல்லாவும் முஸ்லிம் சமூகத்தின் முழுத் துரோகிகளாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படுவார்கள்.

எலி அறுக்குமாம்... தூக்காதாம் என்பது அதாவுல்லாவுக்கும் பசீருக்கும் என்றைக்குத்தான் புரியப்போகிறதோ தெரியாது. வந்தே மாதரம்!!

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-